Published : 07 May 2025 09:51 AM
Last Updated : 07 May 2025 09:51 AM
சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ் பாராட்டு: இதனிடையே, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய பாதுகாப்பு படையை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது மக்களைப் பாதுகாப்பதற்கும் நமது ராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT