Published : 05 May 2025 08:39 PM
Last Updated : 05 May 2025 08:39 PM
சென்னை: “நாடு முக்கியம், பாகிஸ்தானை துண்டாக்க வேண்டும் என்று கூறிய அண்டை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, செயலாளர் கராத்தே தியாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்பி ரா.சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது: “காஷ்மீரில் 28 பேரை சுட்டுக்கொன்ற செய்த கொடூர சம்பவம் உலகையே உலுக்கியிருக்கிறது. பாரத நாடு பழம்பெரும் நாடு. இது ஆன்மிக பூமி. இதில் தீவிரவாதத்துக்கு சிறிதும் இடம் கிடையாது. வங்க தேசத்தைப் பிரித்து கொடுப்பதற்காக 1972-ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அப்போது பாகிஸ்தானின் படைவீரர் ஒருவருக்கு 10 பேர் சமம் என பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. ஆனால் போர் முடிந்த பிறகு ஒரு இந்திய போர் வீரனுக்கு 10 பாகிஸ்தான்கள் சமம் என அதையே மாற்றி எழுதினார்கள்.
அதேபோல் கார்கில் போர் நடைபெற்றபோது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்றது பாகிஸ்தான். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், ‘இந்தியாவில் பாதி இடத்தை இழந்தால் கூட பரவாயில்லை, ஆனால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற இடமே இருக்காது’ என்று தெரிவித்தார். அதன்பிறகு புல்வாமா தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இதையெல்லாம் யாரும் மறந்துவிட முடியாது.
இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ளவர்கள் பிரதமர் மோடியின் படத்தை வைத்து இவர் தான் எங்கள் நாட்டை ஆள வேண்டும் என சொல்கின்றனர். பாகிஸ்தான் படைவீரர்கள் சோர்ந்து போய் உள்ளனர். எப்போது, என்ன நடக்கும் என தெரியாமல் அஞ்சுகின்றனர். இத்தகையச் சூழலில் பாகிஸ்தானியர்களுக்கு தண்ணீர் செல்வதை நிறுத்தியது சரியா என்றும், சிகிச்சைக்கு வந்தால் எப்படி திருப்பி அனுப்புவது என்றும் தமிழகத்தில் சிலர் கேள்வி கேட்கின்றனர்.அதேநேரம், இந்த தேசம்தான் முக்கியம், நாடு முக்கியம், பாகிஸ்தானை துண்டாக்க வேண்டும் என்று கூறிய அண்டை மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நான் தலை வணங்குகிறேன்.
இலங்கையில் இருந்து பிரபாகரனின் தயார் விமானத்தில் வந்து, கீழே இறங்கமுடியாமல் விமானத்திலேயே திரும்பி சென்ற தமிழகம் தானே இது. இந்த தேசம் நன்றாக இருந்தால் தான், நாம் நன்றாக இருக்க முடியும். எனவே தேசத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்யவேண்டும். அதேபோல் பாகிஸ்தானியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களையும் உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT