Published : 05 May 2025 09:09 AM
Last Updated : 05 May 2025 09:09 AM
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்க வேண்டும் அங்கிருக்கும் கட்சிகளுக்கும் சபலத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே கட்சியின் முதல் மாநாட்டிலேயே போகிற போக்கில் ‘அதிகாரத்தில் பங்கு’ என்று கொளுத்திப் போட்டார் விஜய். அது இப்போது நன்றாகவே பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.
“2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும்” என அமித் ஷா வெளியிட்ட அறிவிப்பானது அதிமுக - பாஜக கூட்டணிக்குள் ஆளுக்கொரு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இதை இப்போது சர்ச்சையாக்க வேண்டாம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இரண்டு கட்சிகளுமே அர்த்தத்துடன் அடக்கி வாசிக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சராகும் ஆசை அடிமனதில் இருக்கிறது. ஆனால், திமுக என்ன நினைக்குமோ என்ற அச்சத்தில் அதன் தலைவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். ஆனால், நிர்வாகிகள் விடுவதாக இல்லை. ஏப்ரல் 14-ம் தேதி செல்வப்பெருந்தகையின் பிறந்த நாளுக்காக கட்சியின் மாநிலச் செயலாளர் ஷெரிப், ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு - 2026-ன் துணை முதல்வரே’ என போஸ்டர் அடித்து புரட்சி செய்திருந்தார். இதைப் பார்த்துவிட்டுப் பதறிப்போன செல்வப்பெருந்தகை ஷெரிப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது. கட்சியினர் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியே, “அப்படி போஸ்டர் அடித்ததில் என்ன தவறு இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார்.
இது குறித்து கே.ஆர்.ராமசாமியிடம் பேசினோம். “நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவர்கள் விருப்பத்தைச் சொல்கிறோம். எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என தெரிவிப்பதில் தவறில்லை. இதில் நாங்கள் பின் வாங்கவில்லை. காங்கிரஸ் மாநில தலைவரை, துணை முதல்வர் என ஷெரிப் வெளிப்படுத்தியது அவரது விருப்பம். இதற்கு நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை என்பது எனது கருத்து. அதனால், நோட்டீஸ் அனுப்பியதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கட்சியினரின் ஆர்வத்தை இப்படி ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்தால் கட்சியை வளர்த்தெடுக்க முடியாது. தொண்டர்களும் சோர்ந்து விடுவார்கள். ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸ் கட்சிக்கும் உரிமை இருப்பது நியாயம்தானே?
ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவட்டத் தலைவர்களை நியமிக்காமல் இருப்பது வருத்தமாகத் தான் உள்ளது. மீண்டும் நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று சொன்னால் கட்சியில் எனக்கு சீட் கொடுத்துவிடுவார்கள். ஆனால், நான் கட்சியை வளர்க்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் அவர்.
ஒருவேளை, மறுபடியும் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தீருப்பீர்கள் என்றால் ‘ஆட்சியில் பங்கு’ என்று கேட்பதில் இருக்கும் ஆபத்து உங்களையும் மிரட்டி இருக்குமோ என்னவோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT