Published : 04 May 2025 04:37 PM
Last Updated : 04 May 2025 04:37 PM
கோவை: இந்தியா - பாகிஸ்தான் போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பஹல்காமில் 26 அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.
மத்திய அமைச்சரவையில் உள்ள சிலர் போர் தொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், போர் என்பது எளிதான விஷயம் அல்ல. போர் மூண்டால், இருதரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும். பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். போரை ஆதரிப்பவர்கள் அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.
‘நீட்’ வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக வின் நான்காண்டு கால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வி.பி.சிங், வாஜ்பாய், அத்வானி ஆகியோர் அமைச்சர் பதவி வழங்க முன் வந்த போதும் நான் அதை ஏற்கவில்லை.
பயம் என்பது திமுகவின் அகராதியில் இல்லை. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. திமுகவினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT