Published : 04 May 2025 01:19 AM
Last Updated : 04 May 2025 01:19 AM

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை பாஜகவினர் இழுக்க வேண்டும்: ஜெ.பி.நட்டா அறிவுறுத்தல்

சென்னை காட்டாங்கொளத்தூரில் நேற்று நடைபெற்ற பாஜக மாநில மைய குழு கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுங்கள் என்று சென்னையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இதன் தொடர்ச்சியாக பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வந்தார்.

அப்போது, அதே பல்கலைக்கழக வளாகத்தில் பாஜக மாநில மையக் குழு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை ஜெ.பி.நட்டா வழங்கியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது: கூட்டணி சிறப்பாக அமைந்திருக்கிறது. அதிமுகவினருடன் ஒருங்கிணைந்து தேர்தலுக்கான வேலைகளை செய்ய வேண்டும். இந்த கூட்டணியை இன்னும் வலுபடுத்தும் வகையில் நிர்வாகிகள் உழைக்க வேண்டும். பாஜகவினர் எப்போதும் தொலைநோக்கு பார்வையுடனே செயல்பட வேண்டுமே தவிர, குறுகிய நோக்கோடு ஒருபோதும் செயல்படக் கூடாது என்றும், அது நம் வெற்றிக்கு தடையாக அமையும்.

அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாஜகவை அடிமட்ட அளவில் வலுப்படுத்த வேண்டும். அதற்கு பூத் கமிட்டியை வலுப்படுத்துவதே ஒரே இலக்கு. தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். மேலும், திமுகவின் ஊழல் முறைகேடுகளை முன்னிறுத்தியே பொதுமக்களை சந்திக்க வேண்டும்.

பாஜக இன்னும் பலம் வாய்ந்த கூட்டணியாக அமைய வேண்டுமென்றால், திமுக கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம், ஒரு வேலை அவ்வாறு வெளியேறினால், அந்த கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுக்கும் நடவடிக்கையில் செயல்பட வேண்டும். இவ்வாறு ஜெ.பி.நட்டா கூட்டத்தில் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x