Published : 04 May 2025 01:06 AM
Last Updated : 04 May 2025 01:06 AM

தேமுதிகவில் உயர் பொறுப்பு கிடைக்காததால் முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் அதிருப்தி: சமாதான முயற்சி தீவிரம்

தேமுதிகவில் உயர் பொறுப்பு கிடைக்காததால் 2 முன்னாள் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.

தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக மீண்டும் தேர்வானார். அவைத் தலைவராக இளங்கோவன், பொருளாளராக எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி தரப்பட்டது. ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பிக்கு உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் துணைச் செயலாளராக நியமிக்கப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அந்தப் பொறுப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

‘பதவியில் இருந்து விடுவியுங்கள்’ - இந்நிலையில், தனக்கு வழங்கிய புதிய பதவியில் இருந்து விடுவிக்குமாறு பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, நல்லதம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘நான் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டவன். என்றும் அவரின் குடும்பத்துக்கும், கட்சிக்கும் நன்றியுடன் இருப்பேன். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் விஜயபிரபாகரன் இளைஞரணி செயலாளராகத் தேர்வானதற்கு எனது வாழ்த்துகள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதேநேரம் பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுவிக்காதபட்சத்தில் கட்சியில் இருந்து நான் விலகிக் கொள்வேன்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து நல்லதம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘உயர்மட்டக் குழு பதவியில் இருந்து என்னை விடுவிக்குமாறு மட்டுமே கேட்டேன். மேலும், விடுவிக்காத பட்சத்தில் நான் ஒதுங்கி கொள்வேன் என்றுதான் கூறினேன். என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய விஜயகாந்த் கட்சியில் நான் தொடர்ந்து பயணிப்பேன். தொண்டனாக இருப்பேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல், தேமுதிக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசனுக்கும் உயர்மட்டக் குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அளவிலான பொறுப்புகள் கிடைக்காததால், அதிருப்தியில் அவரும் கட்சியிலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அனகை முருகேசன் கூறும்போது, ‘‘43 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு, விசுவாசத்தோடு செயல்பட்டு வருகிறேன். விஜயகாந்த் தலைவராக இருந்தபோது பொருளாளராகவும், தலைமை நிலையச் செயலாளராகவும் இருந்துள்ளேன். தற்போது மாநில அளவில் பொறுப்புகளில் இருப்பவர்கள் என்னைவிட இளையவர்கள்தான்.

மாநில அளவில் பொறுப்பு கிடைக்காததில் எனக்கு மனம் வருத்தம் உண்டு. இதற்காக எல்லாம் கட்சி வேண்டாம் என்று செல்வதற்கு நான் தயாராக இல்லை. தேமுதிகவிலேயே தொடர்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

தேமுதிகவில் 2 முன்னாள் எம்எல்ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் தலைமை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x