Published : 03 May 2025 12:53 PM
Last Updated : 03 May 2025 12:53 PM
சென்னை: “கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்தி விட அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செவிவழிச் செய்திகள் மக்களின் ஐயத்தையும், அச்சத்தையும் அதிகரிக்கின்றன. எனவே மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விண்ணப்பங்களையும் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25% இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடவில்லை. மே மாதம் பிறந்து, பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்னும் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது.
2009-ஆம் ஆண்டின் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசு பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே செலுத்திவிடும் என்பதால் அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கிறது. இந்த வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி கிடைக்கிறது. அந்த வகையில் இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
கல்வி உரிமை சட்டப்படி ஒதுக்கப்படும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக மாணவர் சேர்க்கை முடிவடைந்து விடும். கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாதது பல்வேறு யூகங்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் செய்யப்படுவது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையானதாகி விட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மானவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்தி விட அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செவிவழிச் செய்திகள் மக்களின் ஐயத்தையும், அச்சத்தையும் அதிகரிக்கின்றன. இதைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கை இரு வாரங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளிலும் கல்வி உரிமைச் சட்டத்தின்படியான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விண்ணப்பங்களையும் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT