Published : 03 May 2025 09:43 AM
Last Updated : 03 May 2025 09:43 AM
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தரப்பில் வெற்றி வேட்பாளராக பார்க்கப்பட்டவர் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை. எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திய அண்ணாமலை, கோவை தொழில்துறையினருக்கும் வாக்குறுதிகளை ஏராளமாக வாரி வழங்கி இருந்தார்.
மத்திய அரசில் செல்வாக்கான நபராக இருப்பதால் இவர் வெற்றிபெற்றால் நமக்கான பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில், கோவை தொழிலதிபர்கள் சிலர், மாநிலத்தை ஆளும் திமுக-வின் பொல்லாப்பு வருமே என்றெல்லாம் கவலைப்படாமல் அண்ணாமலைக்கு ஆதரவாக நின்றார்கள். சிலர் ஆளும் கட்சியின் நெருக்கடிகளையும் சமாளித்து அண்ணாமலைக்காக வாக்குச் சேகரித்தார்கள்; பலர் நிதியுதவியும் தந்தார்கள். ஆனாலும், தேர்தல் முடிவுகள் இவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமைந்து போனது.
காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திமுக அரசின் சாதனை திட்டங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அண்ணாமலை என்ற மனிதருக்காக கோவை மக்கள் சுமார் நாலரை லட்சம் வாக்குகளை வாரி வழங்கினார்கள். அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அண்ணாமலை ஜெயித்தே இருப்பார். கோவை மாவட்ட வளர்ச்சிக்கு அண்ணாமலை அளித்திருந்த வாக்குறுதிகள் அப்படி. அதை நம்பித்தான் தொழில்துறையினரும் அவருக்கு ஆதரவாக களத்தில் நின்றார்கள்.
தேர்தலில் தோற்றாலும் தனது செல்வாக்கை தக்கவைக்க அண்ணாமலை கோவையின் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசிடம் பேசுவார் என்ற அடுத்தகட்ட நம்பிக்கையும் கோவை மக்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. போதாதுக்கு, அண்ணாமலை பாஜக தலைவர் பதவியிலிருந்தும் தூக்கப்பட்டிருப்பதால் மேற்கொண்டும் துவண்டு கிடக்கிறார்கள் கோவை மக்கள்.
தேர்தலில் தோற்றாலும், “கோவையின் தொழில் வளர்ச்சி, விமான நிலைய விரிவாக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசிடம் தேவையான உதவிகளை நிச்சயம் கேட்டுப் பெற்றுத் தருவேன்” என உறுதியளித்தார் அண்ணாமலை. ஆனால், “அண்ணாமலை சொன்னதெல்லாம் வெறும் வாக்குறுதியாகவே இருக்கிறது; எதுவுமே வேலைக்கு ஆகவில்லை” என்று ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள் அவருக்கு பின்னால் நின்ற கோவை தொழில்துறையினர்.
அதிமுக-வுக்கு எதிரான கருத்துகளை அண்ணாமலை பேசிய விதம் அந்தக் கட்சியை நேசிக்கும் பெரும்பகுதி கோவை மக்களை அண்ணாமலை மீது அதிருப்தி கொள்ளச் செய்தது. இருந்தாலும் திமுக-வுக்கு தக்க பதிலடி கொடுக்கிறார் என்பதற்காக அவரைத் தூக்கிப் பிடித்தார்கள். பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்தல், பாலியஸ்டர், விஸ்கோஸ் உள்ளிட்ட செயற்கை இழைகள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்தல், ஜிஎஸ்டி பிரச்சினைகளை சரிசெய்தல், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்துதல், துபாய், கோலாலம்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கோவையிலிருந்து விமான சேவைகளைத் தொடங்குதல் - இதெல்லாம் அண்ணாமலை கோவை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள்.
இவை எதுவுமே செயல்வடிவத்துக்கு வரவில்லை என்பதுதான் கோவை தொழில்துறையினருக்கு அண்ணாமலை மீதிருக்கும் ஆதங்கம்.
முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டாலும், “அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லி இருப்பதை நம்பி, இன்னமும் கோவை தொழில் துறையினர் சிலர், ‘அண்ணாமலையால் அது முடியும்’ என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை அண்ணாமலை இனியாவது காப்பாற்றுகிறாரா என்று பார்க்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT