Published : 03 May 2025 03:59 AM
Last Updated : 03 May 2025 03:59 AM
சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசின் நிதி வந்துவிட்டதாக தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துவிட்டு நிதி வரவில்லை என பொதுவெளியில் திமுக உறுப்பினர் குற்றம்சாட்டுகிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஜிஎஸ்டி வந்த பிறகுதான் நடுத்தர வர்க்கத்தினர் கூட வரி செலுத்தும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. ஜிஎஸ்டி வரி அறிமுகமாவதற்கு முன்பே, மதிப்புக் கூட்டு வரி, அதோடு அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரி என 17 வகையான வரிகளும், 9 செஸ் வரிகளும் இருந்து வந்தன. தற்போது, இந்த வரிகள் அனைத்தும் கலந்துதான் இன்று ஜிஎஸ்டி ஆக உருவாகி உள்ளது.
ஜிஎஸ்டி வருவதற்கு முன்பே நடுத்தர குடும்பத்தினர் தினசரி வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி இருக்கத்தான் செய்தது. அப்போது, கடைகளில் வழங்கப்படும் பில்லில் வரியை காட்டியிருக்க மாட்டார்கள். ஜிஎஸ்டி வந்த பிறகு தான் நாம் செலுத்தும் வரியை நமக்கு பில்லில் வெளிப்படையாக தெரியப்படுத்துகிறார்கள். முன்பு இருந்த வரி விகிதத்தை விட, ஜிஎஸ்டி வந்த பிறகுதான் வரி விகிதம் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும், அனைத்து மாநில நிதியமைச்சர்களின் ஒப்புதலோடு மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. அதேபோல் வரி செலுத்துவதில் எந்த கார்ப்பரேட்டுக்கும் நாங்கள் ஆதரவாக செயல்படுவதில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகை பாஜக கொடுப்பதாக அடித்தளமே இல்லாத குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் முன்வைத்தால், குற்றச்சாட்டு கூறுபவர்களை ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததை தங்களுடைய வெற்றி என திமுகவினர் கூறுகிறார்கள். அப்படியென்றால் சாதியை பற்றியே திமுக பேசக்கூடாதே. நான் தமிழகத்தில் உள்ள சாலைகளில் செல்லும்போது சாதி பெயருடன் பெயர் பலகை இருப்பதை இன்றும் பார்க்கத்தான் செய்கிறேன். சாதி விவகாரத்தில் குடிநீரில் மனித கழிவை கலந்தது தமிழகத்தில் தானே தவிர வேறு எங்கும் இல்லை.
அனைத்திலும் அரசியல் ரீதியாக லாபத்தை தேட திமுக முயற்சிக்கிறது. முதலில் தமிழகத்தில் சமத்துவத்தை திமுக கொண்டு வரட்டும். எனவே சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் ரீதியாக பார்க்காமல், கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் விவரங்களை கொண்டு, பின் தங்கியவர்களுக்கு இன்னும் எவ்வாறு வாய்ப்புகள் வழங்கலாம் என யோசிக்க வேண்டும்.
மத்திய அரசு நிதி தரவில்லை என திமுகவினர் தொடர் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உறுப்பினர், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வந்துவிட்டது என நன்றி கூறி எனக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புகிறார். ஆனால், பொது வெளியில் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என குற்றம் சாட்டுகிறார். இதை என்னவென்று சொல்வது.
ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் வரை சென்று 2 அமைச்சர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட கூட்டணியை நடத்துகின்ற முதல்வர் ஸ்டாலின், பாஜக கூட்டணியை பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT