Published : 03 May 2025 12:30 AM
Last Updated : 03 May 2025 12:30 AM
சென்னை: தேர்தல் மற்றும் கட்சிப்பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் திமுக கடந்தாண்டு முதலே தேர்தல்களத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து, அவர்கள் மாவட்டங்கள் வாரியாக அணிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசி, பல்வேறு பரிந்துரைகளை கட்சி தலைமைக்கு அளித்துள்ளனர். இதில் ஒன்று இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பதும் அடங்கும். இதைத்தொடர்ந்து சில மாவட்ட செயலாளர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை.
முதல்வரும், துணை முதல்வரும் மாவட்ட வாரியாக செல்லும் போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்தான், அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. இதுதவிர, தவெகவும், நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கின்றன. இதில், தவெக திமுகவின் வாக்குகளை கணிசமாக பிரிக்கும. இது திமுகவின் வெற்றியை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால், திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை வெளியேறாமல் தடுத்து, அதிமுக- பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தேர்தலுக்கான அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக விவாதிக்கவும், பணிகளை தீவிரப்படுத்தவும் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வெளியிடுவதுடன், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT