Published : 02 May 2025 09:14 PM
Last Updated : 02 May 2025 09:14 PM
கோவை: “தமிழகத்தில் அனைவரும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். நீட் என்பது மக்களுக்கான பிரச்சினை அல்ல திமுகவின் அரசியல் பிரச்சினை” என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், ஆல் பாஸ் விவகாரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை, சித்தாபுதூர் பகுதியில் நவீன அங்கன்வாடி மையத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று (மே 2) திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சட்டப்பேரவையில் கடந்த ஒன்றரை மாத காலமாக பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில், இந்திய அரசின் பெட்ரோலிய துறையின் ஓஎன்ஜிசி நிறுவனத்தின், சமூக பங்களிப்பு திட்ட (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ், கோவை தெற்கு தொகுதியில் மட்டும் புதிய நவீன அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பிரதமருக்கும், மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வழக்கமாக சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை தொகுதியில் ஏற்படுத்தினாலும் கூட, குறைவான காலத்திற்கு உள்ளாக மக்களுடைய எதிர்பார்ப்புகளை தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லை. அதனால் சிஎஸ்ஆர் நிதியின் உதவியோடு பல்வேறு முயற்சிகளை இந்த தொகுதியில் நான் செயல்படுத்திக் கொண்டுள்ளேன்.
குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம், இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் வருகிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை பிரதானமாக வைத்து இருப்பவர் பிரதமர். கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை குறிப்பாக பெண்களுக்கு பிரதமர் வழங்கி உள்ளார்.
அடுத்த கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம், யாருக்கு எந்த உதவியும் தேவையோ அவர்களுக்கு அந்த திட்டங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும். தமிழகத்திலே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
எந்த திட்டத்தை அறிவித்தாலும் தேர்தலுக்கானது என கூறி கொண்டு தான் இருப்பார்கள். இதற்காகத் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை நோக்கி செயல்படுகிறோம். மத்திய அரசு செயல்திட்டங்களின் ஒட்டுமொத்த இலக்கு 2047-ல் இந்தியா முழுமை அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பது தான். சர்வதேச அளவும் சரி இந்திய அளவிலும் சரி பல்வேறு ஆய்வுகள் குழந்தைகள் 8, 9 வகுப்புகளை கடந்த போதும், அவர்களால் ஒரு பக்கத்தை கூட முழுமையாக படிக்க முடிவதில்லை என்று கூறுகின்றன.
ஒரு பெரிய அளவிலான கணக்கை கூட அவர்களால் போட முடியவில்லை என ஆய்வறிக்கை சொல்கிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர், ஒட்டுமொத்தமாக தேர்வுகளே வேண்டாம் என கூறுகிறாரா? எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.
தமிழ்நாட்டை ஒப்பிடும் போது வடமாநிலங்கள் 40 ஆண்டுகள் பின்தங்கியவை. எனவே அவர்களுடன் எப்பொழுதும் நாம் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே நீட் என்பது மக்களுக்கான பிரச்சினை அல்ல தி.மு.க-வின் அரசியல் பிரச்சினை. முதல்வர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடிய சூழல் எதிர்வருங்காலத்திலும் ஏற்படும். இதை நாங்கள் எச்சரிக்கையாக கூறவில்லை. அவர்கள் செய்த செயலுக்கான வினையை விரைவில் காண்பார்கள் என கூறுகிறோம்” என்று அவர் கூறினார். | வாசிக்க > சிபிஎஸ்இ-யின் ஃபெயில் நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அன்பில் மகேஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT