Published : 02 May 2025 06:20 AM
Last Updated : 02 May 2025 06:20 AM

வாகன நிறுத்த கட்டணம் டிஜிட்டல் முறையில் மட்டுமே வசூல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முறைகேடுகளை தடுக்க, இனி டிஜிட்டல் முறையில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணி தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்யும் வரை, மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு, ஜார்ஜ் டவுன் ரட்டன் பஜார், அண்ணா நகர் 2-வது அவென்யூ, என்.எஸ்.சி. போஸ் சாலை, பெசன்ட் நகர் 6-வது அவென்யூ, நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலை, மயிலாப்பூர் தெப்பக்குளம், சேத்துப்பட்டு மெக்நிக்கோலஸ் சாலை ஆகிய இடங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணி முன்னாள் படைவீரர் கழகமான டெக்ஸ்கோ நிறுவனத்திடம் கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி வழங்கப்பட்டது.

மென்பொருளில் திருத்தம்: டெக்ஸ்கோ நிறுவனம் ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5-ம், 4 சக்கர வாகனத்துக்கு ரூ.20-ம், பேருந்து மற்றும் வேன்களுக்கு ரூ.60-ம் கட்டணமாக கையடக்கக் கருவி மூலமாக டிஜிட்டல் முறையில் வசூலிக்கிறது. இத்தொகை நேரிடையாக இந்தியன் வங்கி, ஜார்ஜ் டவுன் கிளையில் உள்ள வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

டெக்ஸ்கோ நிறுவன பணியாளர்கள் மீது தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை அனுப்ப டெக்ஸ்கோ நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியை ஒழுங்குபடுத்த, மென்பொருளில் சில திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி, வாகன நிறுத்த கட்டணத்தில் வாகன பதிவெண் இடம்பெறுவது கட்டாயமாக்கப்படும். க்யூஆர் குறியீடு மூலம் ரசீதின் உண்மைத்தன்மை கண்டறியப்படும். பணப்பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்தும் முறையை கையடக்கக் கருவியிலிருந்து ரத்து செய்ய இந்தியன் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டணம் வசூலிக்கும் டெக்ஸ்கோ பணியாளர் கட்டாயம் அடையாள அட்டை, மாநகராட்சி, டெக்ஸ்கோ சின்னம் பொறிக்கப்பட்ட மேலங்கி அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x