Published : 02 May 2025 06:11 AM
Last Updated : 02 May 2025 06:11 AM

சாதிவாரி கணக்கெடுப்பு தரவு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

சாதி வாரி கணக்கெடுப்பின் தரவுகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோவையில் நேற்று வலியுறுத்திய, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்புத் தலைவர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர்.படம்: டி.ஜி.ரகுபதி

கோவை: மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, கணக்கெடுப்பு தரவுகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்கள் கூட்டமைப்பும், ஓபிசி ரைட்ஸ் இயக்கமும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.

ஒவ்வொரு சாதியிலும் உள்ள மக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிடாமல், மக்கள்தொகை எவ்வளவு, அவர்களின் சமூக, பொருளாதார நிலை என்ன, எத்தனை பேர் உயர்கல்வி படித்துள்ளனர், எத்தனை பேர் அரசுப் பதவி பெற்றுள்ளனர் என்பன உள்ளிட்ட பல அளவுகோள்களையும், தரவுகளையும் சேகரிப்பதே சாதிவாரி கணக்கெடுப்பாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி எங்கள் கூட்டமைப்பு சார்பில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மட்டுமின்றி, சட்டப் போராட்டமும் நடத்தினோம். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ‘புள்ளி விவரச் சட்டம் 2008’ வழிவகை செய்தும், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இயலாது என்று தட்டிக் கழித்தது. இதில் திமுக மற்றும் அதிமுக அரசுகள் ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டன.

புள்ளி விவரச் சட்டப்படி, பிஹார், ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் கணக்கெடுப்பு செய்து, அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கிய பிறகும்கூட, தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இயலாது என்று தட்டிக் கழித்தது. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்கிறோம். ஆனால், இதற்கான நிபந்தனைகள் என்ன, எவ்வாறு நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்காக 5 வருடங்கள் போராட்டம் நடத்தியுள்ளோம். எனவே, வெறும் கணக்கெடுப்பு நடத்தி தரவுகள் சேகரித்தால் மட்டும் போதாது. கடந்த 70 வருடங்களுக்கு மேலாக கல்வி, அரசு வேலைவாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள எங்களின் ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு, சமூக நீதி அந்தஸ்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் திருஞானசம்பந்தம், வெள்ளியங்கிரி, வேலுசாமி உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x