Published : 02 May 2025 06:25 AM
Last Updated : 02 May 2025 06:25 AM
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்ட நீர் தேக்க உபகோட்ட உதவிப் பொறியாள ராக பணியாற்றிய காளிப்பிரியன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து, கடன் மற்றும்வருமான வரி விவரங்களை தரும்படி காவேரிபட்டிணத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியக்குமார் முன்பாக நடந்தது. அப்போது நேரில் ஆஜரான உதவிப் பொறியாளர் காளிப்பிரியன், அரசு புறம்போக்கு நிலத்தை சீனிவாசன் ஆக்கிரமித்து இருந்தார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றியதால் பழிவாங்கும் நோக்குடன் தனக்கு எதிராக இந்த விவரங் களைக் கோரியுள்ளார், என்றார்.
ஆனால் மனுதாரரான சீனிவாசன் தரப்பில், அதிகாரி காளிப்பிரி யன் ஊழலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவரது வருமானம் தொடர்பாகவும், சொத்து்கள் தொடர்பாகவும் விவரங்களை கோரியதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுநலன் இல்லை: அதையடுத்து மாநில தகவல் ஆணையர் ஆர்.பிரியக்குமார் பிறப்பித்த உத்தரவில், “அரசு ஊழியருக்கு எதிராக மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்களையும் மனுதாரர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியுள்ளார்.
மனுதாரரின் நோக்கத்தில் பொதுநலம் இருப்பதாக தெரியவில்லை. காளிப்பிரியன் ஊழல் செய்திருப்பதாக மனுதாரர் கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம். அவர் கோரியுள்ள விவரங்களை அதுபோன்ற விசாரணை அமைப்புகள் எளிதாக பெற்றுவிடும்.
ஆனால் அதேநேரம் அரசு ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கில் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோர முடியாது. பொதுநலன் இல்லாமல் அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் விவரங்களைக் கோரியுள்ளதால் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக் கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT