Published : 01 May 2025 09:37 AM
Last Updated : 01 May 2025 09:37 AM

மேயரைத் தொடர்ந்து எம்எல்ஏ... சிவகாசியை காங்கிரஸிடம் இருந்து மீட்க களமிறங்கும் திமுக!

தங்கம் தென்னரசு, முத்துலட்சுமி, உதயசூரியன், சங்கீதா

தொடர்ச்சியாக காங்கிரஸ் வசம் இருந்த சிவகாசி நகராட்சியானது கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மேயர், துணை மேயர் பதவிகளை திமுக கைப்பற்றியது. இப்போது அடுத்த அதிரடியாக சிவகாசி எம்எல்ஏ பதவியையும் காங்கிரஸிடமிருந்து கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுத்து வருவதாகச் சொல்கிறார்கள்.

1920-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்​கப்பட்ட சிவகாசி நகராட்​சியின் நூற்றாண்டு வரலாற்றில் 2011-ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற அனைத்துத் தேர்தல்​களிலும் காங்கிரஸ் கட்சியே சிவகாசி நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. திமுக ஒரு முறை கூட நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்​றிய​தில்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த பாரம்​பரி​யத்தைச் சொல்லி, முதல் மேயர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் காய் நகர்த்​தியது.

ஆனால், மொத்த​முள்ள 48 வார்டு​களில் 32 வார்டு​களில் போட்டி​யிட்ட திமுக, காங்கிரஸுக்கு 12 வார்டுகளை மட்டுமே ஒதுக்​கியது. இதனால் காங்கிரஸின் மேயர் கனவு தகர்ந்து போனது. மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள் உள்ளிட்ட அத்தனை பொறுப்​பு​களையும் திமுக-வே கைப்பற்​றியது.

இதன் அடுத்த நகர்வாக தற்போது காங்கிரஸ் வசமுள்ள சிவகாசி எம்எல்ஏ பதவியையும் கைப்பற்ற திமுக களமிறங்கி இருப்​ப​தாகச் சொல்கி​றார்கள். 1962-ல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், அதன் பிறகு கடந்த தேர்தலில் தான் வென்றது. திமுக-வும் இந்தத் தொகுதியில் 1989-க்குப் பிறகு ஜெயிக்​க​வில்லை. அதிகபட்சமாக இந்தத் தொகுதியில் அதிமுக தான் 5 முறை வென்றுள்ளது.

இந்த நிலையில் தான், இம்முறை சிவகாசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட சிவகாசி மாநகரச் செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா, முன்னாள் யூனியன் சேர்மன் முத்துலட்சுமி ஆகியோர் இப்போதே ஆட்களைப் பிடித்து காய்நகர்த்த ஆரம்பித்​திருக்​கி​றார்கள். மாவட்ட அமைச்சரான தங்கம் தென்னரசுவும் இம்முறை சிவகாசியில் உதயசூரியன் உதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்​ப​தாகச் சொல்கி​றார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகாசி திமுக பொறுப்​பாளர்கள் சிலர், “அமைச்சர் தங்கம் தென்னரசு ஆரம்பத்தில் இருந்தே சிவகாசியில் திமுக-வை வெற்றி பெற வைக்க தீவிர முயற்சி எடுத்து வருகி​றார். கடந்த முறை திமுக கூட்ட​ணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்​ஏ-வான அசோகன், சிவகாசி மேயர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்க வைக்க முயற்சி எடுத்​தார்.

ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு அதை நடக்க​விட​வில்லை. சாட்சி​யாபுரம் ரயில்வே மேம்பாலம், சிவகாசி சுற்றுச்​சாலை, சிவகாசி மாநகராட்​சியாக தரம் உயர்வு, கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்டவை அசோகன் தனது முயற்​சி​யாலேயே நடந்ததாக விளம்​பரப்​படுத்​தியதை அமைச்சர் ரசிக்கவில்லை. இதுக்கு நடுவில், அண்மையில் விருதுநகருக்கு வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்​டாலின் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது இம்முறை சிவகாசி தொகுதியில் திமுக வெற்றி பெறவேண்டும் என அறிவுறுத்தி​னார்.

அசோகன்

இதையடுத்து சிவகாசி தொகுதியில் திமுக தான் இம்முறை போட்டி​யிடும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி​யாகச் சொல்லி இருக்​கி​றார்” என்றனர். மீண்டும் சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் போட்டி​யிடுமா என எம்எல்​ஏ-வான அசோகனிடம் கேட்டதற்கு, “2026-ல் சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் போட்டி​யிடுமா என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைமை​யும்தான் முடிவு செய்யும். யார் வேண்டு​மா​னாலும் தேர்தலில் போட்டியிட விருப்​பப்​படலாம். எம்எல்​ஏ-வாக சிவகாசிக்கு நான் செய்திருக்கும் சாதனைகள் நிறைய இருக்​கிறது.

இன்னும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்​களும் இருக்​கிறது. அதனால் கூட்ட​ணியில் சிவகாசி காங்கிரஸுக்கு ஒதுக்​கப்​பட்டால் கட்சித் தலைமை​யிடம் மீண்டும் போட்டியிட கட்டாயம் வாய்ப்புக் கேட்பேன்” என்றார். முதல்​வரின் நம்பிக்​கைக்​குரிய அமைச்சர்களில் ஒருவரான தங்கம் தென்னரசுவின் விருப்​பத்தை மீறி சிவகாசியில் இம்முறையும் கை சின்னமே போட்டி​யிடுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x