Published : 01 May 2025 05:58 AM
Last Updated : 01 May 2025 05:58 AM
தருமபுரி: தருமபுரியில் நடந்த தேமுதிக மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையில் நேற்று தேமுதிக-வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டங்கள் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்ட செயலாளர்கள் குமார், விஜயசங்கர் ஆகியோர் வரவேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக சுதீஷ் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை பொதுச் செயலாளர் பிரேமலதா மேடையில் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு தேமுதிக வன்மையாக கண்டனம் தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நாட்டின் எல்லைப்பகுதிகளை மத்திய அரசு பலப்படுத்திட வேண்டும். தேமுதிக-வின் நிறுவனத் தலைவரான மறைந்த விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து, சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும். வக்பு திருத்தச் சட்டம் மூலம் இசுலாமியர்களின் சொத்துக்களுக்கு பாதிப்பு, தீங்கு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். சாதி வெறி தூண்டுதலால் மாணவர் சமுதாயத்தில் நிலவும் பழி வாங்கும் உணர்வு, போதைக்கு அடிமையாகும் நிலை போன்ற சூழல்களால் மாணவர்கள் வாழ்வை இழக்கின்றனர்.
இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு எதிர்வரும் கல்வியாண்டு முதல் ‘நல் ஒழுக்கம்’ என்ற பாடப் பிரிவை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். தமிழகத்தில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தமிழக அரசு கடும் நடவடிக்கை மூலம் தடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதுடன், கச்சத் தீவையும் மீட்டெடுக்க வேண்டும்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள், விசைத் தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் மின்சாரம், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜிஎஸ்டி-யை குறைப்பதுடன், நெசவாளர்களின் கூலியை அதிகரித்திட வேண்டும். பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT