Published : 30 Apr 2025 11:24 AM
Last Updated : 30 Apr 2025 11:24 AM
சென்னை: தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், இன்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேமுதிக திராவிடகழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என்றார். மேலும், கூட்டணி குறித்து தேர்ந்தல் நெருங்கும்போது முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக, தேமுதிக - தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தையில் நடைபெற்றது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்து பதவி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தொடர்கிறார். வி. இளங்கோவன் அவைத் தலைவராகவும், எல்.கே.சுதீஷ் பொருளாளராகவும், ப.பார்த்தசாரதி தலைமை நிலையச் செயலாளராகவும், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் கொள்கை பரப்புச் செயலாளராகவும், எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில்.. கடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிட்டார். அத்தொகுதியில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரிடம் தோல்வியுற்றார். ஆனால் வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருந்தது. 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவருக்கு அத்தொகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது நினைவுகூரத்தக்கது. வரும் 2026-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய பிரபாகரை தேமுதிக இளைஞரணி செயலாளராக நியமித்துள்ளது அக்கட்சிக்கு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT