Published : 30 Apr 2025 07:54 AM
Last Updated : 30 Apr 2025 07:54 AM
இப்போதைக்கு சாக்குப் போக்குச் சொன்னாலும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்குள்ளும் புது உற்சாகம் பீரிட்டு அடிக்கிறது. “வரட்டும் பார்க்கலாம்” என விட்டேத்தியாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்களுக்கான தொகுதிகளுக்கு துண்டு போட்டு இடம் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
2021 தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளை திமுக-வும், 2 தொகுதிகளை அதிமுக-வும் வென்றன. ஒரே ஒரு தொகுதியை மட்டும் பாமக கைப்பற்றியது. இம்முறை திமுக 4 தொகுதிகளை தனக்கு வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கலாம் என்கிறார்கள். தான் போட்டியிடும் நான்கு தொகுதிகளுக்கும் திமுக வலுவான வேட்பாளர்களை கைவசம் வைத்திருக்கிறது.
ஆனால் அதிமுக தரப்பில், செஞ்சி, விழுப்புரம், திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு திமுக-வுக்கு வலுவான போட்டியைத் தருமளவுக்கு தகுதியான வேட்பாளர்களை எங்கே போய்த் தேடுவது என அந்தக் கட்சியினர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனை மீண்டும் தேர்தல் களத்துக்கு கொண்டுவர அதிமுக தரப்பில் ஆலோசனைகள் நடப்பதாக செய்திகள் கசிகின்றன. திமுக-வில் 22 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் செயலாளராக இருந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். “கலைஞரின் தரைப்படை தளபதி” என திமுக-வினரால் கொண்டாடப்பட்ட செஞ்சியார், திமுக-விலிருந்து வைகோ விலகிய போது அவரோடு மதிமுக-வில் ஐக்கியமானார். பிற்பாடு திமுக-வுடன் மதிமுக கூட்டணி கண்டபோது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற செஞ்சியார் மத்திய இணை அமைச்சரானார்.
அதன் பிறகு, வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் செஞ்சியார் தாய்க்கழகத்துக்கே திரும்பினார். அதே காலகட்டத்தில் தேமுதிக-வுக்குச் சென்ற முன்னாள் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரான ஏ.ஜி.சம்பத்தும் மீண்டும் திமுக-வுக்கே திரும்பினார். ஆனால், இவர்கள் இருவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் பழையபடி கட்சிக்குள் உரிய மரியாதை கிடைக்கவில்லை. திமுக கூட்டங்களுக்கு வரும் செஞ்சியார், ஏ.ஜி.சம்பத், முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேங்கடபதி ஆகியோரை “மும்மூர்த்திகள்” என காதுபடவே கழகத்தினர் கலாய்த்த சம்பவங்களும் உண்டு.
இதனால், ஜெயலலிதா அழைப்பின் பேரில் செஞ்சியார் அதிமுக-வில் இணைந்தார். சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்னார் முயற்சியில் பாஜக-வில் இணைந்தார் ஏ.ஜி.சம்பத். இவர்கள் இருவருக்குமே இப்போது மீண்டும் தேர்தல் யோகம் தேடிவர ஆரம்பித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் மஸ்தானை எதிர்த்து, அதிமுக அமைப்புச் செயலாளரான செஞ்சியாரை செஞ்சி தொகுதியில் களமிறக்க அதிமுக தரப்பில் ஆலோசனைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.
இதேபோல், கடந்த முறை பாஜக போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியில் அமைச்சர் பொன்முடியை எதிர்த்து, இம்முறை பாஜக துணைத் தலைவரான ஏ.ஜி.சம்பத் நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் விழுப்புரம் மாவட்ட அரசியலை வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.
செஞ்சி தொகுதியில் இம்முறை நீங்கள் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே என்று செஞ்சி ராமச்சந்திரனிடமே கேட்டோம். “என்னை பொறுத்தவரையில் என் அரசியல் அனுபவத்தையும், சேவையையும் அதிமுக-வின் வெற்றிக்கு பயன்படுத்தவேண்டும் என்று நினைத்து அதிமுக தலைமை என்னை அணுகினால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார். ஆனால், யார் என்ன சொன்னாலும் கட்சி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டுதான் இருப்பேன்” என்றார்.
அதேபோல், திருக்கோவிலூர் தொகுதிக்கு நீங்கள் தான் இம்முறை வேட்பாளராமே என்று ஏ.ஜி.சம்பத்திடம் கேட்டதற்கு, “திருக்கோவிலூர், விழுப்புரம் - இந்த ரெண்டு தொகுதிகளிலுமே எனக்கு போட்டியிட விருப்பம் தான். திமுக-விலும் எனக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதனால ரெண்டு தொகுதிகளில் எங்கு நின்றாலும் திமுக அணி வேட்பாளரை வெகு சுலபமா என்னால் வீழ்த்த முடியும்” என்று அழுத்தமாகச் சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT