Last Updated : 29 Apr, 2025 05:18 PM

5  

Published : 29 Apr 2025 05:18 PM
Last Updated : 29 Apr 2025 05:18 PM

‘2026 தேர்தலில் அதிமுகவுக்கு 6 எம்எல்ஏக்கள் கூட கிடைக்காது' - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் 

ஆர்.எஸ்.பாரதி | கோப்புப்படம்

சென்னை: “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும், அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகத்தான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டுமல்ல தமிழக மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் பழனிசாமி சொன்ன பொய்க் குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, என அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதல்வர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார்.

கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்ன போதே பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. அவரது குடும்பமே முடிவுரை எழுதிவிட்டது. பாஜக கூட்டனிக்கு பழனிசாமி பம்மியதற்கு மகன் மிதுனே சாட்சி. தேர்தலுக்கு முன்பே மக்கள் தங்களுக்கு அளிக்கப் போகும் படுதோல்வியை மறைக்க விரக்தியில், கேலிக்கூத்துக்களை செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

அடிமை ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி. அதற்கு மக்கள் தொடர்ச்சியாக அதிமுகவுக்கு பரிசளித்த பத்து தோல்விகளே சாட்சி. தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் பாஜகவின் காலடியில் வீழ்ந்துக் கிடந்து அடிமை அரசியல் செய்து வரும் பழனிசாமியை 2026 தேர்தலில் மக்கள் தோற்கடித்து ஓட வைக்கப்போவது உறுதி.
தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்ய நினைக்கும் பாஜகவுக்கும், அதன் அடிமை அதிமுகவுக்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026-லும் ‘Getout’ சொல்லப்போவது உறுதி. இப்போது இருக்கிற 66 அதிமுக எம்எல்ஏ-கள் எண்ணிக்கையில் 2026-ல் 6 கூட கிடைக்காது.

திராவிட மாடல் 2.0, அமையப் போகும் வயிற்றெரிச்சலில் பழனிசாமி செய்யும் இந்த கோமாளிக்கூத்துகளைப் பார்த்தால், பரிதாபம்தான் வருகிறது.‘அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நின்றது’ என சொல்லியிருக்கிறார் பழனிசாமி. சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால், தொடர்ந்து 10 தேர்தல்களில் ஏன் அதிமுக தோற்றது? இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு ‘இம்சை அரசன்’ போல உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மக்களின் ரத்தம் குடித்த ஆட்சி, பழனிசாமியின் ஆட்சி. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கணா...” என அப்பாவி இளம் பெண்கள் கதறல் கேட்டால், அது பழனிசாமி ஆட்சிக்கு சாட்சி. நீட் உள்பட பல்வேறு மாநில உரிமைகளை சுயநலத்துக்காக டெல்லியிடம் அடகு வைத்த அரசுக்கு பழனிசாமியே சாட்சி. தலைவி வாழ்ந்த பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த ஆட்சிக்கு கோடநாடே சாட்சி. அப்பாவையும் மகனையும் அடித்து கொன்றதற்கு சாத்தான்குளமே சாட்சி.

இப்படி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும் அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகதான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டுமல்ல தமிழக மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x