Last Updated : 29 Apr, 2025 02:30 PM

 

Published : 29 Apr 2025 02:30 PM
Last Updated : 29 Apr 2025 02:30 PM

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை விவகாரம்: ஆளுநரை சந்திக்க நாராயணசாமி முடிவு

நாராயணசாமி | கோப்புப்படம்

புதுச்சேரி: “பாஜக பிரமுகர் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கக் கோரி ஆளுநரை சந்திக்கவுள்ளோம். இக்கொலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்,” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று (ஏப்.29) கூறியதாவது: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசின் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து மனு தரவுள்ளோம். அதற்காக காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையில் லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைதாகியுள்ளார். தற்போது ஆமூர் சாலையில் பாலங்கள் ஆறுக்கும் மேலே அமைக்கப்பட்டதில் தற்போது ஊழல் நடந்துள்ளது. அதேபோல் பொதுப்பணித்துறையில் நாமினேஷன் பணிகளிலும் ஊழல் நடந்துள்ளது. காவல்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

பாஜகவைச் சேர்ந்த உமாசங்கர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுல்ளார். அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் கடந்த 22-ம் தேதி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உமாசங்கரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை நான்கு முறை சந்தித்து பாதுகாப்பு தரக்கோரியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் 26-ம் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு அழுத்தம் தந்தது யார்? ஏன் அழுத்தம் தரப்பட்டது? காவல்துறை விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுகிறது.

உமாசங்கர் புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் கொலைச் சம்பவம் நடந்திருக்காது. இது திட்டமிட்ட படுகொலை. இதில் அரசியல் பின்னணி உள்ளது. காவல்துறை, முதல்வரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?- சாமிபிள்ளை தோட்டத்தில் மதுபான பார் பிரச்சினை, குயில்தோப்பு பிரச்சினை, அமைச்சர் குடும்பத்து நில விவகாரம் ஆகியவை பிரச்சினையாக தெரிவிக்கப்படுகிறது.

புதுச்சேரி போலீஸ் விசாரித்தால் நீதி கிடைக்காது. இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கொலையானவர் குடும்பத்தினரும், பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமாரும் கோரியுள்ளனர். இவ்வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் எஸ்எஸ்பி கலைவாணன் இச்சம்பவத்தில் அரசியல் பின்னணி இல்லை என்கிறார். இது அதிர்ச்சி தருகிறது. ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகள் தலையீட்டால், காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. ரவுடிகளை வைத்து வழக்கை பூசிமுழுக பார்க்கிறார்கள். இச்சூழல் இருந்தால் அரசியல் தலைவர்கள் யாரும் புதுச்சேரியில் நடமாடமுடியாது.

தற்போது கொலையான உமாசங்கரும், அவரது தந்தையும் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு சென்றவர்கள். அதேபோல் வில்லியனூரில் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு சென்ற செந்தில்குமாரும் கொலையானார். வேட்பாளர் அளவுக்கு வருவோர் கொலையாகும் சூழல் உள்ளது. பாஜகவில் இருப்போருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும் மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும். முன்பு நடந்த செந்தில்குமார் கொலைக்கு காவல்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை பதவிவிலக கோரினோம்.

இக்கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும். போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதால் சிபிஐ விசாரணை தேவை. ஆளுநர் கைலாஷ்நாதன் இதில் தலையிட்டு சிபிஐக்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக ஆளுநரை சந்திப்போம். குற்றவாளிகளுக்கு அரசு துணைபோகிறது. மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவேண்டும். நான் காலையில் சைக்கிளில் செல்கிறேன். என்னை எவர் வெட்டுவார் என யாருக்கு தெரியும்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x