Last Updated : 29 Apr, 2025 11:20 AM

2  

Published : 29 Apr 2025 11:20 AM
Last Updated : 29 Apr 2025 11:20 AM

‘தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமையும்’ - சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்.

சென்னை: “இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசியதோடு, அந்தச் சாதனைகளால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது வருமாறு: இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று கருணாநிதி சொன்னார். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் ‘ஸ்டாலின் என்றால் சாதனை, சாதனை, சாதனை’ என்று சொல்லியிருப்பார். தலைவர் கலைஞர் இப்போது இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார் என்று யோசித்து திட்டங்களைத் தீட்டுகிறேன்.

கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டில் இருந்து தமிழகத்தை மீட்டு எல்லா துறைகளிலும் நம் மாநிலத்தைத் தலைநிமிரச் செய்துள்ளேன். இது சாதாரண சாதனை அல்ல. கடும் உழைப்பால் கிடைத்த சாதனை. திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை பார்க்காத சாதனையை தமிழகம் படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் செய்யாத சாதனைகளைப் படைத்துள்ளது.

2024- 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் 9.6% பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை இந்த வளர்ச்சியை தமிழகம் கண்டதில்லை. இதனை நான் சொல்லவில்லை, எப்போதும், எல்லாவிதத்திலும் தமிழகத்தை ஒடுக்கும் ஒன்றிய அரசே சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம். தேசிய சராசரியே ரூ.2.06 லட்சம் தான்.

மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியால் அந்தக் குறியீட்டில் நாம் தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் இருப்போர் 1.4% தான். தேசிய அளவில் 11.2% பேர் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஐ.நா. அமைப்பின் விருதைப் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான அரசு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிகமான மருத்துவ சீட் உள்ள மாநிலமும் தமிழகம் தான்.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. சூரிய சக்தி மின் உற்பத்தியில் 4-வது இடத்தில் உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளோம்.

இது ஒரு கட்சியின் அரசு அல்ல. ஒரு கொள்கையின் அரசு. அதனால் தான் அண்ணா அரசு, கலைஞர் அரசு, எம்ஜிஆர் அரசு என்ற வரிசையில் ஸ்டாலின் அரசு என்று சொல்லாமல் திராவிட மாடல் அரசு என்று நான் குறிப்பிட்டேன். ஒரு தனி மனிதனின் ஆட்சி அல்ல. இது ஒரு தத்துவத்தின் ஆட்சி.

தமிழகம் இந்தச் சாதனைகளை எல்லாம் சாதாரணமாக செய்துவிடவில்லை. மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச் சுவர்கள் இவற்றிற்கெல்லாம் இடையில் மாட்டிக் கொண்ட மனிதனைப் போல் ஒரு பக்கம் மத்திய அரசு, மறு பக்கம் ஆளுநர், இன்னொரு பக்கம் நிதி நெருக்கடி என்று எல்லா தடைகளையும் கடந்து சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை. என்னைப் பொறுத்தவரை கொள்கையும், இயக்கமும் தான் முன்னிலை பெற வேண்டும். வலிமை பெற வேண்டும்.

தமிழ்நாடு சமத்துவபுரம் ஆக வேண்டும் என்று திராவிடக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, இலக்குகளை நிர்ணயித்து, திட்டங்களைத் தீட்டுகிறோம். சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச் சார்பின்மை, கூட்டாட்சி கருத்தியல்கள், அதிக அதிகாரம் கொண்ட மாநிலம் என்ற இலக்குகளுக்காகத்தான் உழைக்கிறோம்.

தமிழக அமைச்சர்கள் அவரவர் துறையில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட அப்படிச் செயல்பட முக்கியக் காரணம் மாநிலத்தின் அமைதி. அதை எனது தலைமையின் கீழ் இருக்கும் காவல்துறைதான் உறுதி செய்கிறது. அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளரும், தொழிற்சாலைகள் வரும், கல்வி மேம்படும், பெண்கள், இளைஞர்கள் முன்னேற்றம் காண்பார்கள், உற்பத்தி அதிகரிக்கும், சுற்றுலா பயணிகள் வருவார்கள். தமிழகத்தின் அமைதிக் காரணம் எனது துறையான காவல்துறைதான். சட்டம் - ஒழுங்கை முறையாகப் பேணி இந்த சாதனையைப் படைக்க துணையாக இருந்த காவல்துறையினர் அனைவருக்கும் நானும், நீங்களும், தமிழக மக்களும் நன்றிக்குரியவர்கள்.

சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதால் தான் தமிழகத்தில் கலவரங்கள் இல்லை. கலவரங்களைத் தூண்ட யாரேனும் நினைத்தாலும் மக்களே அதை முறியடித்துவிடுவார்கள். மொத்தத்தில் சட்டம் ஒழுங்கில் கல் விழாதா எனத் துடிப்பவர்களின் ஆசையில் மண் தான் விழுந்திருக்கிறது.

குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஏதாவது ஒரு சில இடத்தில் கவனக்குறைவால் சில தவறுகள் நடந்தால், அதை சுட்டிக்காட்டும் பட்சத்தில் சரி செய்து கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது மணிப்பூர் அல்ல, இது காஷ்மீர் அல்ல, உத்தரப் பிரதேச கும்ப மேளா மரணங்கள் இங்கே நடக்கவில்லை. இது தமிழ்நாடு. மறந்துவிடாதீர்கள்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x