Published : 27 Apr 2025 07:03 PM
Last Updated : 27 Apr 2025 07:03 PM
சென்னை: பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 26 பேர் உயிரிழந்து இன்றோடு ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத இயலாது. 140 கோடி இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத் தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
நமது நோக்கம் பாகிஸ்தானோடு இந்தியா ஒரு ராணுவ முஸ்தீப்பை அல்லது ராணுவ நடவடிக்கையைக் காட்ட வேண்டும் என்பது அல்ல. ஒரு போர் என்பது எவ்வளவு பெரிய பொருளாதார ரீதியான பாதிப்புகளை உருவாக்கும்; அதே போல உயிரிழப்புகளை உருவாக்கும் என்பது தெரியும். அது ஒரு தரப்புக்கு மட்டுமல்ல, இரண்டு தரப்புக்குமே பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும்.
ஆனால், இப்பொழுது அதைத் தாண்டி வேறொரு நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவான காலகட்டத்திலிருந்து இந்த பிரச்சினையை இந்தியா சந்தித்து வருகிறது.
1999 ஆம் ஆண்டு கார்கிலில் இந்தியாவின் எல்லையிலே இருந்தது. 300 கிலோ மீட்டர் தாண்டி வந்து அவர்கள் தாக்குதல் தொடுத்தார்கள். 5 தினங்களுக்கு முன்பு தங்கள் விடுமுறை காலத்தைக் கழிப்பதற்காக காஷ்மீர் பகுதிக்கு சென்றிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நமது எல்லையிலே இருந்து 140 கிலோமீட்டர் தாண்டி பல நாட்களுக்கு முன்பாகவே, திட்டமிட்டு குதிரை ஓட்டுபவர்களைப் போலவும் வீரர்களைப் போலவும் உள்ளே புகுந்து தாக்குதல் தொடுத்து இருக்கிறார்கள்.
அதை ஏதோ ஒரு சாதாரணமான நிகழ்வாக கருதக் கூடாது. அது 140 கோடி இந்திய மக்கள் மீதும் தொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய யுத்தமாகத்தான் அதை கருத வேண்டும். இதையெல்லாம் கணக்கிலே கொள்ளாமல் அரசியல் காரணங்களுக்காக பாஜகவுக்கு எதிரான மன நிலையிலிருந்து கொண்டு பாகிஸ்தான் மீது எவ்வித ராணுவ நடவடிக்கையும் கூடாது என சிலர் கூறுவது அறிவீனமானது ஆகும்.
இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்திருந்தாலும் கூட, அதை வேறு விதமாக அணுகலாம். ஆனால், சாதாரணமான பிரஜைகள் மீது தாக்குதல் தொடுப்பது என்பதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது? இதை எப்படி ஏற்றுக்கொள்வது? இத்தாக்குதல்களை எந்த காரணத்தைக் கொண்டும் மன்னிக்க இயலாது. இந்திய அரசு இதற்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும். பத்து தீவிரவாதிகளின் தீய நடவடிக்கைக்காக ஒரு நாட்டை எப்படித் தண்டிப்பது என்று சில பேர் கேள்வி எழுப்புகிறார்கள்?
தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடிய நாடு எது? எந்த எல்லை? உலகினுடைய வேறு எந்த நாட்டிலிருந்து இதுபோன்று தீவிரவாதிகள் அடிக்கடி ஒரு தேசத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்? பாகிஸ்தானிலிருந்து மட்டும்தான் நடக்கிறது. எனவே, பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது.
இப்பொழுது வெளிப்படையான பாகிஸ்தானுடைய பிரதமர் நாங்கள் நடுநிலையான விசாரணைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார். நடுநிலையாளர்கள் யார்? அந்த விசாரணைக்கு பின்பு என்ன நடவடிக்கை இருக்கும்? யார் யாரைத் தண்டிப்பது? இது போன்ற நடுநிலை விசாரணை எல்லாம் உதவாது. தண்டிக்கப்பட வேண்டியது பாகிஸ்தான். எனவே அதை எப்படி முறையாகச் செய்ய வேண்டுமோ அப்படி நடவடிக்கை எடுத்தால் தான் இந்திய இறையான்மை பாதுகாக்கப்படும்.
ஏற்கெனவே இது குறித்து நாம் கடந்த முறை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். முக்கியமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடிய காஷ்மீரை இந்தியாவோடு ஒன்றாக இணைப்பது ஒன்றுதான் ஒரு சரியான தீர்வாக அமையும். தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக இந்தியாவிற்குள் உள்ளே வந்து விடுவது மிக எளிதாக இருக்கிறது. எனவே இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவித்தாக வேண்டும் என்பது நமது கடமை. அதை விடுவிக்காமல் இந்தியா நிம்மதியாக இருக்க இயலாது.
எனவே எதிரிகளுக்கு உதவக்கூடிய வகையிலே சில பேர் சில மாற்றுக் கருத்துக்களைச் சொல்லலாம். அதைப் பற்றி எல்லாம் இந்திய அரசு கவலைப்படாமல் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடிய அந்த காஷ்மீர் பகுதியை மீட்டு எடுப்பதன் மூலம் தான் இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிரந்தரமான அமைதி திரும்பும். பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களின் கொட்டம் அடங்கும். எனவே அந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT