Published : 27 Apr 2025 04:40 PM
Last Updated : 27 Apr 2025 04:40 PM
சென்னை: போக்குவரத்து போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் ஆணையர் அருண் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, விபத்துக்களைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டும் அல்லாமல் வேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, பயணிப்பது, காரில் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது உள்பட போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், சாலை நிலவரங்கள், அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீஸார் வைத்துள்ளனர். இதன் மூலம் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை எளிதில் அடையாளம் கண்டறிந்து வாகனங்களை கவனமுடன் இயக்குகின்றனர். இதுபோன்று போக்குவரத்து போலீஸாரின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைத்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் (2024) ஒப்பிடும்போது, 25.04.2025 நிலவரப்படி 2025 ஆம் ஆண்டில் இறப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 25.04.2024 வரை 173 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இந்தாண்டு இது வரை 149 உயிரிழப்புகளே நடந்துள்ளது. விபத்துகளைக் குறைப்பதற்கும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.' இவ்வாறு காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT