Published : 27 Apr 2025 04:13 PM
Last Updated : 27 Apr 2025 04:13 PM
சிவகாசி: 'நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்ஜிஆர் உடன் முடிந்து விட்டது. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது', என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ''விஜய் செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரைப் பார்க்க அனைவரும் வருவது இயல்பு. விஜய் சிவகாசி வந்தால் நாங்கள் கூட ஓரமாக நின்று அவரை பார்ப்போம். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேல் பிரச்சாரத்திற்கு வந்தார். நடிகருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுவது எம்ஜிஆர் உடன் முடிந்துவிட்டது. எம்ஜிஆர் நடிப்பு மூலம் மக்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறி, 1957-ல் அரசியலுக்கு வந்து, 1967-ல் எம்எல்ஏ ஆகி, தனிக்கட்சி தொடங்கி 1977-ல் ஆட்சியைப் பிடித்தார்.
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் மக்கள் பணியாற்றி, ரசிகர்களை பொதுத் தொண்டில் ஈடுபட வைத்து, அரசியலுக்கு கொண்டு வந்து அதன்பின் கட்சி தொடங்கியதால் தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரைப்போல் ஆகலாம் என அனைவரும் நினைப்பது தவறு. அது நடக்கவே நடக்காது. திமுகவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அதிமுகவின் தலைமையை ஏற்றால் எங்கள் கூட்டணிக்கு வரலாம். அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் பல தேர்தல்களை கண்ட தளபதிகள். அதனால் வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம்,'' இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT