Published : 27 Apr 2025 10:49 AM
Last Updated : 27 Apr 2025 10:49 AM

கல்லூரி கல்வி இயக்குநர் ஜூன் 2-ல் ஆஜராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்ற அவமதி்ப்பு வழக்கில் கல்லூரிக் கல்வி இயக்குநர் வரும் ஜூன் 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்படும் 6 கல்லூரிகளில் காலியாக இருந்த 130 உதவிப் பேராசிரியர்கள், ஒரு நூலகர், ஒரு உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களி்ன் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்படும் தேர்வு நடவடிக்கைகளுக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு தகுதி பெற்ற 754 விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வு செய்ய சென்னை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகம் தங்களது பிரதிநிதிகளை அனுப்பாததை எதிர்த்து, பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரி்த்த உயர் நீதிமன்றம், இந்த தேர்வு நடவடிக்கைகளை தொடரும் வகையில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும்படி இரு பல்கலைக் கழகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது 126 பேரின் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தது நீதிமன்ற அவமதிப்பு செயல் என கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் கல்லூரிக் கல்வி இயக்குநர் வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்ற எண்ணம் தனக்கு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் வரும் ஜூன் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல பொதுநல வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவை இதுவரையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமல் படுத்தாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x