Published : 27 Apr 2025 12:53 AM
Last Updated : 27 Apr 2025 12:53 AM
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த 2024-2025-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 6.5 சதவீதமாக இருந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 9.5 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய வளர்ச்சியாகும். இந்த நீடித்த வளர்ச்சி வாயிலாக. 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் இலக்கை நம்மால் எளிதாக எட்ட முடியும்.
மேலும், சேவைத் துறையின் வளர்ச்சி 12.7 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 7 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்களில் 100 வயதை கடந்தவர்களும் உள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தொடர்ந்து நிதித்துறை தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: மதுராந்தகம், அரக்கோணம், குளித்தலை, சீர்காழி, சாத்தூர், திருச்செந்தூர் ஆகிய 6 இடங்களில் ரூ.10.96 கோடி செலவில் புதிய சார்நிலை கருவூலக அலுவலகங்கள் கட்டப்படும். கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் புதியதாக பணி நியமனம் செய்யப்பட்ட 250 பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும்.
அரசு தணிக்கையாளர்களின் தொழில்திறன் மேம்பாட்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும். தணிக்கையர்கள், மற்றும் தணிக்கை நிறுவனங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய தலைமை தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் ஓர் உதவி மையம் நிறுவப்படும்.
சுற்றுச்சூழல் துறை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன்மூலம் பள்ளிகளில் சூழல் மன்றங்கள் விரிவுபடுத்தப்படும். மாணவர்களுக்கு இயற்கை முகாம்கள் நடத்தப்படும். கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அரிப்பைத் தடுக்க கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும் தூத்துக்குடியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயி்ர்க் கேடயங்கள் உருவாக்கப்படும்.
ராஜபாளையம் சஞ்சீவி மலையை பாதுகாக்கவும், காடுகளை வளர்க்கவும் ரூ.5 கோடியில் சஞ்சீவி மலை மறுசீரமைப்பு மற்றும் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை பள்ளி திட்டம் 4.0, ரூ.20 கோடி செலவில் மேலும் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும். சுற்றுச்சூழல் விருதுகளுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்படும். அதன்படி முதல் பரிசு ரூ.50 ஆயிரமாகவும் 2-ம் பரிசு ரூ.30 ஆயிரமாகவும், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
தமிழக ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்கும் வகையில் ரூ.4 கோடியில் முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT