Published : 27 Apr 2025 12:04 AM
Last Updated : 27 Apr 2025 12:04 AM
அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடித்திருப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பேரவையில் நேற்று அவருக்கு பதிலாக மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை செந்தில் பாலாஜி கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணை இல்லாமல் சிறை தண்டனை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்ய இருப்பதாக பேரவை நிகழ்வுகள் பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டு, மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். பேரவையில் செந்தில் பாலாஜி இருந்தும்கூட, மசோதாவை அவர் தாக்கல் செய்யாததால், சலசலப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும் பேரவை நிறைவு நாளில் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, நிறைவேற்றப்படும். மசோதாக்களை தாக்கல் செய்த அமைச்சர்கள் அன்றைய தினம் அவையில் இருக்க வேண்டும். அந்த வகையில், சட்டப்பேரவை கூட்டம் வரும் 29-ம் தேதி நிறைவடைய உள்ளது. ஆனால், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு அதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஏப்.28) விசாரணைக்கு வர உள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்டம்பர் 26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அவர் அமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் (நாளை) முடிவுசெய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இதனால், அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பேரவையில் வரும் 29-ம் தேதி மசோதாவை நிறைவேற்றுவதில் பிரச்சினை ஏதும் ஏற்பட கூடாது என்பதாலேயே செந்தில் பாலாஜிக்கு பதிலாக, மசோதாவை அமைச்சர் ரகுபதி நேற்று தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இதற்கான கடிதத்தை அவர் வழங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT