Published : 24 Apr 2025 06:04 AM
Last Updated : 24 Apr 2025 06:04 AM

எரி​யுலை​யால் சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்பா? - ஆய்வு செய்ய மேயர், ஆணை​யர், கவுன்​சிலர்​கள் ஹைதரா​பாத் பயணம்

சென்னை: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன், 7 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 பேர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட பழைய குப்பையை அகழ்ந்தெடுத்து மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அங்கு மக்காத, மறுசுழற்சி செய்ய முடியாத குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலையை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் பணியை, டெல்லி எம்எஸ்டபிள்யூ நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கியுள்ளது. இத்திட்டம் ரூ.1248 முதலீட்டில், அரசு, தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக மாநகராட்சி கொடுங்கையூரில் 75 ஏக்கர் இடத்தை கொடுக்கவுள்ளது.

நாளொன்றுக்கு 3,750 டன் குப்பை கையாளப்பட உள்ளது. தினமும் 2,100 டன் குப்பையிலிருந்து 31 மெகாவாட் மின்சாரம், 550 டன் மக்கும் கழிவிலிருந்து எரிவாயு, 1100 டன் கழிவிலிருந்து உரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு வட சென்னையில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திவரும் கொடுங்கையூரை சுற்றியுள்ள வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் ஜெயராமன், டில்லிபாபு, ஜீவன், ரேணுகா ஆகியோர் மேயர் ஆர்.பிரியாவை ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் சந்தித்துள்ளனர்.

அப்போது எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆலை செயல்பட இருப்பதாக மாநகராட்சி சார்பில் விளக்கப்பட்டுள்ளது. அதில் கவுன்சிலர்கள் திருப்தி அடையவில்லை. அதனைத் தொடர்ந்து ஐதராபாத் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்வது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை) ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக்குழு தலைவர் கோ.சாந்தகுமாரி, கவுன்சிலர்கள் ஜெயராமன் (4-வது வார்டு), எஸ்.ஜீவன் (35-வது வார்டு), ஜெ.டில்லிபாபு (37-வது வார்டு), எம்.ரேணுகா (42-வது வார்டு), அதியமான் (105-வது வார்டு), குணசுந்தரி (33-வது வார்டு), பூர்ணிமா (87-வது வார்டு) ஆகியோர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றனர். இவர்கள் இன்று, ஐதராபாத் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆகியவற்றை பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x