Published : 24 Apr 2025 09:43 AM
Last Updated : 24 Apr 2025 09:43 AM
விரக்தி பேச்சின் மூலம் மீண்டும் விவாத அரங்கிற்குள் வந்திருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர் வைத்த கோரிக்கைக்கு, “யாரிடம் நிதி, திறன், அதிகாரம் உள்ளதோ அந்த அமைச்சரிடம் கேளுங்கள்” என விரக்தியுடன் பதிலளித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதுபற்றி பேரவைக்கு வெளியே கருத்துச் சொன்ன பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன், “திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு” என்றார்.
இதற்கு பதில் சொல்லும் விதமாக பி.டி.ராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பழனிவேல் தியாகராஜனையும் மேடையில் வைத்துக்கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “நம்முடைய எதிரிகள் வெறும் வாயையே மெல்லக் கூடிய வினோத ஆற்றலைப் பெற்றவர்கள். அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை கட்சி தலைவராக மட்டுமல்ல... உங்கள் மீது அக்கறை கொண்டவனாகவும் அறிவுரை வழங்க கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
மதுரை மத்திய தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற பழனிவேல் தியாகராஜனுக்கு பொறுப்புமிக்க நிதியமைச்சர் பொறுப்பை வழங்கினார் ஸ்டாலின். ஆனால், இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதில் மதுரையின் சீனியர்களான மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதிக்கும், அமைச்சர் பி.மூர்த்திக்கும் அத்தனை மகிழ்ச்சி இல்லை. இதனால் இரு தரப்பும் கைகோத்துக் கொண்டு தியாகராஜனுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தியது. எதையும் பட்டென பேசிவிடும் தியாகராஜன் இதை பொது மேடைகளில் வெளிப்படையாக பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், திமுக தலைமைக்கு எதிராக அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி தியாகராஜனுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கியது. அப்போதும் இதே பாஜக தரப்பில் இருந்துதான் தியாகராஜனுக்கு ஆதரவான குரல்கள் வந்து விழுந்தன. அப்போது, தியாகராஜனை பாஜக வளைத்தாலும் வளைத்துவிடும் என்ற அளவுக்கு பேச்சு அடிபட்டது. இருந்தபோதும் தியாகராஜன் மீது கைவைத்தால் அவப் பெயர் ஏற்படலாம் என யூகித்த திமுக தலைமை, அவரது இலாகா பொறுப்பை மட்டும் மாற்றியது. பவர்ஃபுல்லான நிதித் துறைக்கு அமைச்சராக இருந்த தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். அதிலும் தனக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லை என்பதே தியாகராஜனுக்கு இருக்கும் ஆதங்கம். அதையே இப்போது பேரவையில் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். தியாகராஜன், ஒளிவு மறைவின்றி பேசுவதாக எதிர்க்கட்சிகள் சொன்னாலும், “இவர் ஏன் அடிக்கடி இப்படி எதையாவது பேசி முதல்வரை தர்ம சங்கடத்தில் தள்ளுகிறார்?” என திமுக தரப்பில் ஆதங்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தியாகராஜனின் ஆதரவாளர்களோ, “தியாகராஜனின் தந்தையார் ஐயா பிடிஆரும் இப்படித்தான் மனதில் பட்டதை யார் இருக்கிறார் யார் இல்லை என்றெல்லாம் பார்க்காமல் பளிச்சென சொல்லிவிடுவார். மதுரையில் மு.க.அழகிரிக்கும் அவருக்கும் பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் தலைவர் கலைஞரிடமே பலமுறை அவர் குரலை உயர்த்திப் பேசி நியாயம் கேட்டிருக்கிறார். அதேபோல் அமைச்சர் தியாகராஜனுக்கும் எப்போதுமே பாசிச சாயல் இருக்காது. அதேசமயம், கட்சியில் முடிவெடுக்கும் அதிகார மையம் தனக்கான முக்கியத்துவத்தை குறைப்பதாக அண்மைக்காலமாக அவருக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது. அவரது விரக்தியான பேச்சுகள் அதன் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.
அவரைப் போல இன்னும் சில அமைச்சர்களுக்கும் தலைமை மீது வருத்தங்கள் இருக்கிறது. ஆனால், அவர்கள் எல்லாம் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளொன்றும் புறமொன்றுமாக நடிக்கிறார்கள். ஆனால், தியாகராஜனுக்கு அப்படி நடிக்கத் தெரியவில்லை. திமுக எப்போதுமே தொண்டர்களை தாங்கிப் பிடிக்கின்ற இயக்கம். தொண்டர்களே கலைஞரை தூக்கிப் பிடித்தனர். ஆனால் இப்போது, மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்குத்தான் காலமாக இருக்கிறது.
உதயநிதியைப் பொறுத்தவரை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், கட்சிக்காக உழைப்பவர்களை மதிக்க வேண்டும் என நினைக்கிறார். கட்சிக்காரர்கள் பிரச்சினைகளைச் சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்கிறார். அதிகாரம் முழுமையாக அவர் கைக்கு வரும்போதுதான் ‘கலைஞர் திமுக’-வை பார்க்க முடியும் போலிருக்கிறது” என்று சொன்னவர்கள், “கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் தனக்கிருக்கும் ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொல்கிறார் என்பதற்காக தியாகராஜன் வேறு கட்சிக்குப் போய்விடுவார் என சிலர் கதை கட்டுகிறார்கள். நீதிக்கட்சி தலைவர் வழிவந்த வாரிசான அவர் ஒருகாலும் அப்படியான முடிவை எடுக்க மாட்டார்” என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT