Published : 24 Apr 2025 04:46 AM
Last Updated : 24 Apr 2025 04:46 AM

பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பேரவையில் பழனிசாமி கோரிக்கை

சென்னை: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது:

காஷ்மீரில், ‘மினி ஸ்விட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் ‘பெஹல்காம்’ என்ற மலைபாங்கான பள்ளத்தாக்கு, இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய ஊராகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்த நேரத்தில், கடந்த ஏப்.22-ம் தேதி மாலை 3 மணி அளவில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்து, சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் இன்று காலை வரை 28 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாவர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை இந்த அரசு மீட்டு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்துக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x