Published : 24 Apr 2025 04:39 AM
Last Updated : 24 Apr 2025 04:39 AM

தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பேரவையில் கண்டனம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் முடிவில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீர் மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான பெஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

நேற்று அங்கு பைசாரன் மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும். துயரத்தையும் அளித்துள்ளது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாத, தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்குக் கிடைத்தவுடன் உடனடியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டேன். தொடர்ந்து, 011-24193300, 9289516712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையரை இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டேன்.

காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவியைச் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியரும், ஐஏஎஸ் அதிகாரியுமான அப்தாப் ரசூலை நேரடியாக பெஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை.

இதுபோன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழகமும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் அமைதி அஞ்சலி செலுத்தினர்.

முதல்வரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன், இரா.அருள், டி.ராமச்சந்திரன், நாகை மாலி, ஈ.ஆர்.ஈஸ்வரன், சதன் திருமலைகுமார், ஷாநவாஸ், தி.வேல்முருகன் ஆகியோர் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தும் பேசினர்.

முதல்வர் உத்தரவு: இதனிடையே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில், தீவிர​வாதத் தாக்​குதலுக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளதுடன் இத்​தாக்​குதலில் தமிழகத்​தைச் சேர்ந்த பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்​குத் தேவை​யான உதவி​களை ஒருங்​கிணைத்​துத் தர அறி​வுறுத்​தி​யிருப்​ப​தாக தெரி​வித்​திருந்​தார்.

மேலும், புதுக்​கோட்டை மாவட்ட கூடு​தல் ஆட்​சி​யர் அப்​தாப் ரசூலை நேரடி​யாக பஹல்​காம் சென்று ஒருங்​கிணைப்​புப் பணி​களை உடனடி​யாக மேற்​கொள்​ள​வும் தேவை​யான மருத்​துவ வசதி​களை வழங்​க​வும் உத்​தர​விட்​டார். இதையடுத்​து, காஷ்மீர் சென்​றுள்ள அப்​தாப் ரசூல், காயமடைந்​தவர்​களை சந்​தித்​து, ஆறு​தல் கூறி அவர்​களை அழைத்​துவர நடவடிக்கை எடுத்​துள்​ள​தாக தமிழக அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x