Published : 24 Apr 2025 03:41 AM
Last Updated : 24 Apr 2025 03:41 AM

காஷ்மீர் தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தமிழக ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

ஆளுநர் ஆர்.என்.ரவி: சுற்றுலா பயணிகளை இலக்காக வைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தீவிரவாதிகளும், அவர்களது வழிகாட்டிகளும் இதற்குரிய விலையை கொடுப்பார்கள்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: காஷ்மீரில் மக்களுக்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி, இயல்புநிலையை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய இழிவான செயல்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: நிராயுதபாணியான மக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான செயலை மன்னிக்க முடியாது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்: பாஜக அரசின் தவறான கொள்கை, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பாடத்தை வழங்க வேண்டும்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடிய நிகழ்வு மத்திய அரசின் அப்பட்டமான பாதுகாப்புத் துறை தோல்வி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மநீம தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி. சரத்குமார், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x