Published : 23 Apr 2025 12:13 PM
Last Updated : 23 Apr 2025 12:13 PM
சென்னை: ''தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டின் எல்லையை வலுப்படுத்த வேண்டும்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 26-க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்கின்ற பேரதிர்ச்சியான செய்தி அனைவரின் மனதையும் வேதனை அடைய செய்திருக்கிறது.
இப்போதுதான் ஜம்மு காஷ்மீரில் சகஜமான நிலைமை திரும்பிக்கொண்டு இருக்கிறது என மக்கள் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்ற சூழல் உருவாக்கி இருக்கும், இந்த நேரத்தில் எந்த வித தவறும் செய்யாத அப்பாவி சுற்றுலாப் பயணிகளைத் தீவிரவாதிகள் தாக்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. இதை தேமுதிக கண்டிக்கிறது.
இந்த தீவிரவாதத் தாக்குதல் மிகவும் கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது. எனவே இந்திய அரசு உடனடியாக தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பாடத்தை வழங்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டினுடைய எல்லையை இன்னும் பாதுகாப்புடனும் வலுவானதாகவும் மாற்றி தீவிரவாத தாக்குதல்களில் இருந்து, மக்களை காக்க வேண்டியது நமது அரசின் கடமை.
இது போன்ற தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க தேவையான உதவியை மத்திய அரசு உடனடியாக செய்து தர வேண்டும். மேலும், உயிரிழந்த அப்பாவி உயிர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT