Published : 23 Apr 2025 05:26 AM
Last Updated : 23 Apr 2025 05:26 AM
இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: திமுக அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 27.76 லட்சம் மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 1.82 லட்சம் விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஏப்.1-ம் தேதியன்று தமிழகத்தின் மொத்த மின்நிறுவு திறன் 32,595 மெகாவாட் என்பது தற்போது 39,770 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் அதிகபட்ச மின்நுகர்வு 2024-25-ல் 20,830 மெகாவாட்டாக உள்ளது. அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டு மின்னுற்பத்தி திட்டங்களை விரைந்து முடிக்கப்படும்.
இதன்படி, உடன்குடி அனல்நிலையத்தில் 660 மெகாவாட் திறன் உடைய தலா 2 அலகுகள் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 91 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதல் அலகு வரும் ஜுலை மாதமும், 2-ம் அலகு அக்டோபரிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிகஉய்ய அனல்மின் திட்டம் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளின் 62 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், உப்பூர் மிகஉய்ய அனல்மின் திட்டம் 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள், எண்ணூர் மிகஉய்ய அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் 660 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு என மொத்தம் 5 திட்டங்களின் மூலம் 5,700 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு 800 மெகாவாட் திட்டம் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,900 மெகாவாட் அனல்மின் திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்.
அனல்மின் நிலையங்களின் திறனை மேம்படுத்துவதற்காக தூத்துக்குடி, வடசென்னை- 1 மற்றும் 2, மேட்டூர்- 1 மற்றும் 2 அனல்மின் நிலையங்களில் மொத்தம் ரூ.869.80 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தின்படி, சூரிய சக்தி மின்னுற்பத்தியில் 10,510 மெகாவாட் நிறுவு திறனுடன் தமிழகம் நாட்டில் 4-வது இடத்தில் உள்ளது. 2024-25-ம் ஆண்டு 404.18 மெகாவாட் அதிகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர், சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: தமிழகத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும், தூத்துக்குடி மாவட்டத்தில் 600 மெகாவாட் திறன் உடைய அனல்மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.57 கோடியில் மன்னார்குடி, சிதம்பரம், திருவிடந்தை, திருஉத்திரக்கோசமங்கை, சமயபுரம், மேல்மலையனூர், திருவிடைமருதூர், காளையார் கோவில் ஆகிய ஊர்களில் தேரோடும் வீதிகள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செல்லும் மேல்நிலை மின்பாதைகள் புதைவடங்களாக மாற்றப்படும். ரூ.1,192 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வோல்ட் துணைமின் நிலையம் மற்றும் 11 புதிய 110 கிலோவோல்ட் துணைமின் நிலையங்கள் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட 11 அறிவிப்புகளை வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT