Published : 22 Apr 2025 07:28 PM
Last Updated : 22 Apr 2025 07:28 PM
மதுரை: மதுரை ஆட்சியர் இல்லத்தின் முன்பு 2-வது நாளாக போலீஸ்காரரின் மனைவி தனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மதுரை ஆயுதப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி பாபினா. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். ஆயுதப்படை காவல் பிரிவில் பணிபுரிந்த மகாராஜன் சமீபத்தில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கெனவே கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் தனித்தனியே வசிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஜன் நாகமலை புதுக்கோட்டைக்கு பணி மாறியதால் ஆயுதப்படை குடியிருப்பை காலி செய்ய காவல்துறை நிர்வாகம் கூறி இருக்கிறது.
இதனால், ஆத்திரமடைந்த பாபினா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில், நேற்று மதுரை ஆட்சியர் பங்களா முன்பு திடீரென தனது மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தல்லாகுளம் போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்றும் தனது மகனுடன் ஆட்சியர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற அவர், வாசல் முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது கணவரையும் அங்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, கணவருடன் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆயுதப்படை குடியிருப்பை காலி செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என பாபினா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரரின் மனைவி 2 நாளாக ஆட்சியர் வீடு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT