Published : 22 Apr 2025 06:36 PM
Last Updated : 22 Apr 2025 06:36 PM

70 வயதடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: 70 வயதடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது உள்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நேரத்தில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்; எழுபது வயதடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கப்படாத சத்துணவு - அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர், வனத்துறையினர், ஊராட்சி எழுத்தர், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்ட குளறுபடிகளை நீக்கி, அனைத்து காப்பீட்டு முறையீடுகளுக்கும் விரைவில் செலவுத் தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், சென்னை நந்தனம் கருவூல ஆணையர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ந.ஜெயச்சந்திரன், துணைத்தலைவர்கள் கி.இளமாறன், பி.சுகுமாரன், த.குப்பன், பா.ராமமூர்த்தி, என்.அரங்கநாதன், செயலாளர்கள் குரு.சந்திரசேகரன், எஸ்.ஆறுமுகம், இரா.மனோகரன், உள்பட 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தலைவர் நெ.இல.சீதரன் பேசுகையில், “மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குளறுபடி உள்ளது. இதை நீக்கி, அனைத்து காப்பீட்டு முறையீடுகளுக்கும் விரைவில் செலவுத் தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு முதல்வர் செவிசாய்க்க வேண்டும். இல்லாவிடில் அடுக்க கட்ட போராட்டம் தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்றார்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: இக்கோரிக்கைகள் அனைத்தும் நாங்கள் வைத்தது அல்ல. தேர்தல் வாக்குறுதிகளாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுத்ததை தான் வலியுறுத்துகிறோம். குறிப்பாக, 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்தை பற்றி சட்டப்பேரவையில் நிதியமைச்சர், விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்.

இது காலதாமதத்தை மேலும் அதிகரிக்கும் என்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். இந்த கோரிக்கைகளில் வாதாடுவதற்கோ பேசுவதற்கோ எதுவும் இல்லை. நீங்களே ஏற்றுக்கொண்டு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிதான் என்பதால், இதை உணர்ந்து நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம். இல்லை என்று சொன்னால், விரைவில் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x