Published : 22 Apr 2025 09:28 AM
Last Updated : 22 Apr 2025 09:28 AM
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என கிட்டத்தட்ட நான்குமுனைப் போட்டி உறுதியாகிவிட்டது. இதில் நாதக-வும் தவெக-வும் பிரிக்கும் வாக்குகள் யாருக்குச் சாதகமாகும் என்பதே இப்போதைய கேள்வி.
தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி கணக்குகள் மாறினாலும், மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் எப்போதும், பிரதானமான திமுக, அதிமுக கூட்டணியின் வெற்றி தோல்விகளுக்கு காரணமாகி இருக்கின்றன. 2016 தேர்தலில் அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. திமுக கூட்டணி 39.85% வாக்குகளுடன் 98 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரண்டு அணிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 1 சதவீதம்தான். அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகள் 6.1 சதவீதம். தனித்து போட்டியிட்ட பாமக 5.36 சதவீதம், பாஜக 2.86 சதவீதம், நாதக 1.07 சதவீதம் என வாக்குகளை பெற்றன. இதுதான் கூட்டணி கணக்கு. இதில் ஒரு சில கட்சிகள் திமுக பக்கம் போயிருந்தால் ஆட்சியே மாறியிருக்கலாம்.
2021 தேர்தலில் திமுக கூட்டணி 45.38 சதவீத வாக்குகளுடன் 159 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணி 39.71 சதவீத வாக்குகளுடன் 75 தொகுதிகளில் வென்று ஆட்சியை இழந்தது. இரு கூட்டணிகளுக்கு இடையிலான வித்தியாசம் 6 சதவீதம் தான். அந்தத் தேர்தலில் 3-வது இடம்பிடித்த நாதக பெற்ற வாக்குகள் 6.58 சதவீதம். அதேபோல், அமமுக – தேமுதிக 2.85 சதவீதமும் மநீம 2.73 சதவீதமும் வாக்குகளை பெற்றன.
வரும் 2026 தேர்தலில் திமுக அணி அப்படியே தொடர்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையலாம். வழக்கம் போல நாதக தனித்து போட்டியிடுகிறது. தவெக-வுக்கும் தனித்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லை. ஒருவேளை, நாதக - தவெக கூட்டணி அமையலாம். தற்போதைய சூழலில் 4 முனைப் போட்டி நிச்சயமாகி உள்ளது.
இதில் 2024 தேர்தலின்படி நிரூபிக்கப்பட்ட வாக்கு சதவீதப் படி திமுக அணிக்கு 46.97 சதவீத வாக்குகள் உள்ளன. அதிமுக அணியின் 23.05 சதவீதம், பாஜக அணியின் 18.28 சதவீத வாக்குகளைக் கூட்டினால் 41.33 சதவீதம் வரும். 2024-ல் நாதக தனித்து 8.20 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்குகளை அறுவடை செய்து எளிதாக வெற்றிபெறலாம் என்பது அதிமுக - பாஜகவின் கணக்கு. ஆனால், புதிதாக களத்துக்கு வரும் தவெக யாருடைய வாக்குகளைப் பிரிக்கப்போகிறது எனத் தெரியவில்லை.
விஜய் கடுமையாக திமுக-வை எதிர்க்கிறார். எனவே, திமுக-வுக்கு எதிரான வாக்குகள் தவெக-வுக்குப் போகலாம் இது அதிமுக-வுக்கு மைனஸ். அதேசமயம், விஜய், பாஜக-வையும் கடுமையாக எதிர்க்கிறார். இதனால் பாஜக-வுக்கு எதிரான வாக்குகள் விஜய்க்கு வரலாம். இது திமுக-வுக்கு மைனஸ். மேலும், திமுக, பாஜக-வை பிடிக்காத சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் வாக்குகள் தவெக – நாதகவுக்கு போகும்.
இது திமுக, அதிமுக அணிகளுக்கு மைனஸ். ஒருவேளை, நாதக - தவெக கூட்டணி அமைந்தால் அது திமுக, அதிமுக அணிகளுக்கு மேலும் சவாலாகும். 2006-ல் விஜயகாந்த் 3-வது அணியாக களத்தில் நின்றார். அது அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக-வின் ஆட்சி பறிபோக காரணமானது. 2011-ல் அதே தேமுதிக-வை கூட்டணிக்குள் இழுத்து திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றினார் ஜெயலலிதா. அதேசமயம், 2016-ல் அமைக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி எதிர்க்கட்சியான திமுக-வுக்குப் போகவேண்டிய வாக்குகளை அறுவடை செய்து, மீண்டும் அதிமுக ஆட்சியமைய காரணமானது. 2021-ல் நாதக பிரித்த வாக்குகள் அதிமுக ஆட்சியை இழக்க வழியமைத்தது.
எப்படிப் பார்த்தாலும் தற்போதைய 4 முனைப் போட்டி, திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் கத்திமேல் நடக்கும் பாதைதான். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அதற்குள்ளாக காட்சிகள் மாறுகிறதா எனப் பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT