Published : 21 Apr 2025 05:37 AM
Last Updated : 21 Apr 2025 05:37 AM
திண்டுக்கல்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் யார், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை அமித்ஷாவும், பழனிசாமியும் முடிவு செய்வார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஈஸ்டர் சிறப்புப் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற திண்டுக்கல் மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வந்தார்.
அங்கு பங்குத்தந்தை செல்வராஜிடம் அவர் ஆசிபெற்றார். தொடர்ந்து, திண்டுக்கல்லில் நடந்த திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இரட்டை இலை, தாமரை உறுதியான, இறுதியான கூட்டணி. திமுகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டியதுதான் நமக்கு முக்கியம். தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கு வகிக்கும் கட்சிகள் எவை, யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்து அமித்ஷாவும், பழனிசாமியும் முடிவு செய்வார்கள். சமூக வலைதளங்களில் பாஜகவினர் வெளியிடும் பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும். நமது கட்சியைச் சேர்ந்தவர் ஒரு பதிவிட்டால், அது நியாயமாக இருக்கும் என்று அனைவரும் மதிக்க வேண்டும்.
அதிக எம்எல்ஏக்கள்... நான் தலைவராக இல்லை. தலைமைத் தொண்டனாகத்தான் இருக்கிறேன். இந்த முறை சட்டப்பேரவைக்கு பாஜகவிலிருந்து அதிக எம்எல்ஏக்கள் செல்வார்கள். தேசிய ஜனநாயக ஆட்சி, பழனிசாமி தலைமையில் அமையும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கன்ட்ரோலில் இருந்து அவுட் ஆஃப் கன்ட்ரோலில் சென்றுள்ளது’ என கூறியுள்ளார். 2026-ல் திமுக அவுட் ஆஃப் கன்ட்ரோலில் தமிழகத்தை விட்டுப்போக வேண்டும் என்ற எண்ணத்துடன் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
‘எந்த ஷா வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது’ என முதல்வர் கூறியுள்ளார். ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவற்றில் பாஜக ஆட்சி அமைந்தது. இனி அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வரும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தேசியப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஹெச்.ராஜா, திருமலைசாமி, மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக பழநியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆளுநரை அஞ்சல்காரர் என்று கொச்சைப்படுத்துவது முதல்வருக்கு அழகல்ல. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது அவர்களின் விருப்பம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT