Published : 20 Apr 2025 05:37 AM
Last Updated : 20 Apr 2025 05:37 AM
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு சென்றுவிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோவையில் பாஜக நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியை விட்டு வீட்டுக்கு இறைவன் அனுப்பப் போகிறான். கூட்டணி குறித்தும், எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும் கட்சியினர் கவலைப்பட வேண்டாம். அதுகுறித்து முகநூல், ட்விட்டரில் பதிவிட வேண்டாம். இவற்றை அகில இந்திய தலைமை முடிவு செய்யும். திமுகவிடம் இருந்து பாஜக தொண்டர்களை பாதுகாப்பது என் பணி. நமது செல்போன்களை திமுக அரசு ஒட்டுக் கேட்கிறது. தமிழகத்துக்கு மாதம் இருமுறை வருவதாக அமித்ஷா கூறியுள்ளார். பூத் கமிட்டி சரிபார்ப்பு, சீரமைப்பு ஆகியவற்றை நாம் திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சிக்கு எதிரான போக்கு மக்களிடம் நிலவுகிறது. 2026 தேர்தலில் திமுக அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு சென்று விடும். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் கட்சியை வலுப்படுத்தினர். அதைப் பயன்படுத்தி, அதிக எம்எல்ஏ-க்களை உருவாக்க, அதிமுக தொண்டர்கள், தலைவர்களோடு நாம் ஒன்றிணைந்துப் பயணிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் கட்சியாக மாற வேண்டும்.
நம் சனாதன தர்மத்தையும், வேத மந்திரங்களையும் பாதுகாக்க வேண்டும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், நம்மை நாமே பாதுகாக்க முடியாத சூழல் உருவாகிவிடும். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், துணைத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT