Published : 19 Apr 2025 12:05 PM
Last Updated : 19 Apr 2025 12:05 PM
சென்னை: சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் இன்று (ஏப்.19) முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இந்த ‘ஏசி’ மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 6-ம் தேதி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொடங்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7, பிற்பகல் 3:45, இரவு 7:35 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் ‘ஏசி’ ரயில், தாம்பரத்துக்கு காலை 7:42, மாலை 4:26, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் சென்றடைகிறது. அங்கிருந்து புறப்படும் முதல் இரண்டு சேவை, செங்கல்பட்டுக்கு முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செல்கிறது.
செங்கல்பட்டில் இருந்து காலை 9, மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்துக்கு காலை 9:41, மாலை 6:26 மணிக்கு வருகிறது. அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு செல்கிறது. தாம்பரத்தில் அதிகாலை 5:45 மணி ரயில் புறப்பட்டு , காலை 6:45 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரயில் அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும் புறநகர் பாதையில் இயக்கப்படும்.
பிரதான பாதையில் செல்லும்போது, இந்த ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
கட்டணம் எவ்வளவு? இந்த ரயில் குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது. இந்த ரயிலுக்காக தனி கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT