Published : 19 Apr 2025 05:50 AM
Last Updated : 19 Apr 2025 05:50 AM
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் 1,250 நடத்துநர்களை நியமிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் வியாசர்பாடி, பூந்தமல்லி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையார்பேட்டை பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இவற்றுக்கு நாள்தோறும் 1,250 நடத்துநர்களை வழங்கும் திறன் கொண்ட மனிதவள மேலாண் நிறுவனங்கள் ஏப்ரல் 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாக நடத்துநர்களுக்கு ஊதியம் வழங்கப்பட கூடாது. அதற்கேற்ப நிர்ணயிக்கப்படும் ஊதியத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாநகர போக்குவரத்து கழகம் மாதம்தோறும் வழங்கும்.
நடத்துநர்களை கண்காணிக்க 12 மேற்பார்வையாளர்கள், கூடுதலாக 390 நடத்துநர்களை நிறுவனம் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஆண் - பெண் நடத்துநர்களுக்கான கல்வி, உடல்தகுதி உள்ளிட்ட வரையறைகளை பின்பற்றி ஊழியர்களை வழங்க வேண்டும். அவர்களுக்கான பணப் பலன், பயோமெட்ரிக், 8 மணி நேர பணி போன்றவற்றுக்கு நிறுவனமே பொறுப்பேற்று, கண்காணிக்க வேண்டும்.
சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஊக்கத் தொகை வழங்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வாயிலாக தொகை செலுத்தப்படும். ஒப்பந்தத்தை மே 12-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT