Published : 19 Apr 2025 06:10 AM
Last Updated : 19 Apr 2025 06:10 AM
சென்னை: பெண்களுக்கான `பிங்க்' ஆட்டோ எனப்படும் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட `பிங்க்' ஆட்டோக்கள் எனப்படும் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் நடைமுறைப்படுத்தப்படும் என சமூக நலத்துறை சார்பில் கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை கடந்த மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தின விழாவில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, முதல்கட்டமாக 100 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்களை வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது. தொடர்ந்து 2-ம் கட்டமாக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் சமூக நலத்துறை ஈடுபட்டு வருகிறது. அதன்படி இதுவரை பிங்க் ஆட்டோ திட்டத்துக்கான 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வுக்காக 141 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சமூக நலத்துறை கள ஆய்வுக் குழு, கடந்த சில நாட்களாக இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் பிங்க் ஆட்டோக்களை சில ஆண்கள் வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல்நல பிரச்சினைகள் காரணமாக பெண் பயனாளிகள் ஆட்டோக்களை ஓட்டாத நாட்களில், அவர்களது கணவர்கள் ஓட்டியது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்களை பெண்கள்தான் ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தற்போது சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT