Last Updated : 19 Apr, 2025 09:35 AM

 

Published : 19 Apr 2025 09:35 AM
Last Updated : 19 Apr 2025 09:35 AM

பங்களா ரெடி... ஆண்டிபட்டியில் தினகரன்... ஆர்ப்பரிக்கும் அமமுகவினர்!

அதிமுக-வை கைவிட்டாலும் டி.டி.வி.தினகரனை பாஜக தலைவர் அண்ணாமலை அத்தனை எளிதில் கைவிட மாட்டார் போலிருக்கிறது. இருவருக்கும் இடையிலான நட்பு அப்படி இருக்கிறது. இந்தச் சூழலில், எங்கு சுற்றினாலும் அதிமுக, பாஜக கூட்டணிக்குத்தான் வரும் என்ற நம்பிக்கையில் அண்ணாமலையே ஜெயம் என தெம்போடு இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அவரது கட்சியினரோ தினகரன் போட்டியிடப் போகும் தொகுதியை முதற்கொண்டு அடையாளம் குறித்து வைத்துவிட்டார்கள்.

ஆர்​.கே.நகர் இடைத் தேர்தலில் அதிசய வெற்றியை பெற்றாலும் தினகரனுக்கு முதன் முதலில் தேர்தல் களத்தை அமைத்துக் கொடுத்த மாவட்டம் தேனி தான். 1999 மக்களவைத் தேர்தலில் முதன் முதலில் பெரியகுளம் (இப்போது தேனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நின்ற தினகரன், சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தி​யாசத்தில் வெற்றி​பெற்​றார்.

அதற்கு அடுத்த தேர்தலில் இதே தொகுதியில் சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தி​யாசத்தில் வெற்றிக் கோட்டை தவறவிட்​டார். இருந்​த​போதும் அதன் தொடர்ச்​சியாக வந்த மாநிலங்​களவைக்கான தேர்தலில் தினகரனை மாநிலங்​களவைக்கு அனுப்பி அவரை பெரியகுளம் எம்பி கணக்காகவே வைத்திருந்தார் ஜெயலலிதா. தினகரன் தேனி அரசியலில் இருந்தால் அது தனது தொகுதியான ஆண்டிபட்டியை கவனித்​துக்​கொள்​ளவும் வாய்ப்பாக இருக்கும் என அவர் நம்பி​னார்.

இதனால், சுமார் 11 ஆண்டு காலம் தேனி மாவட்ட அரசியலில் தன்னை முன்னிலைப்​படுத்திக் கொண்ட தினகரன், இந்த மாவட்ட மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்து தனக்கென ஒரு செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டார். இதற்கெல்லாம் இவருக்கு பக்கபலமாய் நின்றவர்கள் ஓபிஎஸ் மற்றும் தங்கதமிழ்ச்​செல்வன்.

கடந்த காலம் இப்படி இருக்க, 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவில்​பட்டி தொகுதியில் நின்று தோற்றுப் போன தினகரன், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்ட​ணியில் பழையபடி தேனி தொகுதியில் போட்டி​யிட்​டார். இதில் விநோதம் என்னவென்​றால், இம்முறை இவரை எதிர்த்து திமுக-வில் போட்டி​யிட்டவர் இவரது முன்னாள் சிஷ்யர் தங்கதமிழ்ச்​செல்வன். சுமார் 2 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகள் வித்தி​யாசத்தில் சிஷ்யகோடி​யிடம் தோற்றுப் போனார் தினகரன்.

மோசமான தோல்வியைச் சந்தித்​தாலும் தேனி மாவட்​டத்தை விட்டு வருவதாக இல்லை போலிருக்​கிறது தினகரன். 2026-ல் களமிறங்​கு​வதற்காக அவர் ஆண்டிபட்டியை தயார்​படுத்​துவதாக அவரது கட்சிக்​காரர்கள் கிசுகிசுக்​கி​றார்கள். இதற்குக் காரணம், 1984-ல் உடல் நலம் பாதித்​திருந்த எம்ஜிஆரை தேர்தல் பிரச்​சா​ரத்​துக்கு வராமலேயே ஜெயிக்க வைத்த தொகுதி ஆண்டிபட்டி. இரண்டு முறை ஜெயலலிதாவை பேரவைக்கு அனுப்பிய தொகுதி​யும்கூட. இந்த சென்டிமென்டை எல்லாம் வைத்து தினகரன் இம்முறை ஆண்டிபட்​டிக்கு வருகிறார் என்கி​றார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தேனி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் காசிமாயன், “ஆண்டிபட்​டி​யானது பெரும்​பகுதி கிராமப்​புறங்களை உள்ளடக்கிய தொகுதி. புரட்சித் தலைவரை இன்னமும் தெய்வமாக வணங்கும் மக்கள் இங்கு நிறையப் பேர் இருக்​கி​றார்கள். தான் பதவியில் இருந்த காலத்தில் தேனி மாவட்​டத்​துக்காக நிறைய சாதித்துக் கொடுத்​திருக்​கிறார் தினகரன். அந்த நன்றிக் கடனுக்​குத்தான் 2024 மக்களவைத் தேர்தலில் அவருக்கு இங்குள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி​யிலும் சுமார் 50 ஆயிரம் பேர் வாக்களித்​திருக்​கி​றார்கள். இந்த மாவட்​டத்தில் கோயில் திருவிழா உள்ளிட்ட சுபநிகழ்ச்​சிகளுக்கு யார் அழைத்​தாலும் தட்டாமல் வந்து நிற்பார் தினகரன்.

இத்தனை செல்வாக்கு இருப்​பதால் 2026-ல் தினகரனை ஆண்டிபட்​டியில் போட்டியிட வைப்போம். அதைக் குறிக்​கோளாக வைத்து ஆண்டிபட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதி​களில் முதல் கட்டமாக செயல்​வீரர்கள் கூட்டங்களை நடத்தி​யுள்​ளோம். ஆண்டிபட்​டியில் தினகரன் போட்டி​யிடும் பட்சத்தில் அவர் தங்கு​வதற்காக தேனி புறவழிச்​சாலையில் மதுராபுரி பகுதியில் புதிதாக பங்களா டைப் வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்​துள்​ளோம். அவர் தேனி மாவட்​டத்​துக்கு வந்தால் இங்கு தான் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகி​றார். ஆண்டிபட்​டியில் தினகரனை அதிக வாக்கு​கள் வித்​தி​யாசத்தில் ஜெயிக்க வைக்க இப்போதே களப்​பணியை தொடங்​கிவிட்​டோம்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x