Published : 19 Apr 2025 06:32 AM
Last Updated : 19 Apr 2025 06:32 AM
தமிழகத்தில் மகப்பேறு கால உயிரிழப்புகள் 45-ல் இருந்து, 39 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய 47 நாட்களுக்குள்ளும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு உயர் சிறப்பு மருத்துவ குழு சிகிச்சை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கர்ப்பிணியர்களுக்கு தீவிர சிகிச்சையுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் குறித்த பட்டியல், அவர்களின், பிரசவ காலத்துக்கு ஓரிரு மாதத்துக்கு முன் வழங்கப்படுகிறது.
அந்தந்த கிராமபுற செவிலியர்கள் வாயிலாக, அவ்வப்போது கர்ப்பிணியர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தொடர் நடவடிக்கையால் கர்ப்பால உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஒரு லட்சம் பிரசவங்கள் என்ற அடிப்படையில் உயிரிழப்புகள் கணக்கிடப்படுகிறது. கரோனா காலக்கட்டத்தில் 90 ஆக இருந்த உயிரிழப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில், 52 மற்றும் 45 ஆக பதிவாகி வந்தது. தற்போது, கர்ப்பிணியர் தொடர் கண்காணிப்பு மற்றும் பிரசவத்திற்கான மருத்துவமனை முன்கூட்டியே திட்டமிடல் போன்றவற்றால், கர்ப்பகால உயிரிழப்பு 39 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்புகளை தொடர்ந்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆயிரம் குழந்தைகளில், 8 ஆக இருந்த உயிரிழப்புகள், 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த இறப்புகள் குறைப்புக்கு, அதிகாரிகள் மற்றும் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT