Published : 19 Apr 2025 06:28 AM
Last Updated : 19 Apr 2025 06:28 AM
அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று, அதை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் 12 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று, அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. பொதுமக்களிடம் பெற்ற நிதியை, பினாமி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் முதலீடு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. நியோமேக்ஸ் நிறுவனம் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று பினாமி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நிலங்கள் வாங்குவதற்காக கணிசமான நிதியை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த 2023-ம் ஆண்டு முடக்கியது.
இதன் தொடர்ச்சியாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை பெற்று, அந்த பணத்தை பினாமி நிறுவனங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அந்த வகையில், நியோமேக்ஸ் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்த தொகை உட்பட சுமார் ரூ.8,000 கோடி வரை கடன்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர் விசாரணையின் அடிப்படையில், நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்களான கார்லண்டோ ப்ராப்பர்ட்டீஸ், ட்ரான்ஸ்கோ ப்ராப்பர்ட்டீஸ், ட்ரைடாஸ் ப்ராப்பர்ட்டீஸ், குளோமேக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் மற்றும் அதன் இயக்குநர்கள், பங்குதாரர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி, சார்லஸ் மற்றும் தொடர்புடையவர்களின் ரூ.121.80 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT