Published : 19 Apr 2025 04:57 AM
Last Updated : 19 Apr 2025 04:57 AM

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் தர வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராமங்களில் உள்ள நிலங்களின் வகைகள், விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், பிறப்பு, இறப்பு விவரம், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் பணியையும், அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு கிராமங்களின் ஆணிவேராக கிராம உதவியாளர்கள் திகழ்கின்றனர்.

இவர்கள் 24 மணி நேரமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிபவர்கள். பெருமழை, புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களிலும், தேர்தல் நேரத்திலும் இரவு பகல் பாராமல் அயராது உழைக்கக் கூடியவர்கள் கிராம உதவியாளர்கள். அரசு ஊழியர்களாக இருந்தும் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்குக் காரணம் இவர்களுக்கு அரசு ஊழியர்களைப் போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததுதான்.

வருவாய்த் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இவர்களுக்கு மட்டும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் அவர்களது பணி இருந்து வருகிறது.

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் தெரிவிக்கிறது.

இதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான கிராம உதவியாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தவிப்பதாகவும் கிராம உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யவும், பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x