Published : 19 Apr 2025 04:53 AM
Last Updated : 19 Apr 2025 04:53 AM
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியானது, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக, கட்சி எம்எல்ஏக்களுக்கு வரும் ஏப்.23-ம் தேதி சென்னையில் பழனிசாமி விருந்தளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்த நிலையில், 2024 தேர்தலை எதிர்கொண்டு இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. இரு அணிகளும் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் தான் திமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி எளிதாக கிடைத்துவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன் பிறகும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக கூறி வந்தனர். திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் இருக்கும் நிலையில், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அக்கூட்டணி தான் மீண்டும் வெற்றி பெறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்தார்.
அதன் தொடர்ச்சியாக சென்னைக்கு வந்த அமித் ஷா, பழனிசாமியுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து, 2026 தேர்தலில் பழனிசாமி தலைமையில் கூட்டணி என அறிவித்தார். பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வரான பிறகு, பல தேர்தல்களை சந்தித்து குறிப்பிடும்படியாக வெற்றிகளை பெற முடியாமல் போனது.
ஒற்றைத் தலைமை சர்ச்சையில் கூட நீண்ட சட்டப்போராட்டங்களை எதிர்கொண்ட பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளராகி, ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற்றிய பிறகும், மூல வழக்கில் தீர்ப்பு வராத நிலையில், அந்த வெற்றியை கொண்டாடும் மன நிலையில் பழனிசாமி இல்லை.
இதனால் கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு அதிமுகவினருக்கு மகிழ்ச்சி, கொண்டாட்டம், விருந்து என உற்சாகம் இன்றி சோர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரும் முடியும் தருவாயில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடர்களில், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தான் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில் புதுப்பது பிரச்சினைகளை கிளப்பி, யார் அந்த தியாகி என பேட்ஜ் அணிந்து வந்து, கருப்பு சட்டை அணிந்து வந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அதனால் அதிமுக எம்எல்ஏக்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வரும் 23-ம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பழனிசாமி விருந்தளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி தொடர்பான எதிர்க்கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் இந்த விருந்தை பழனிசாமி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
செயற்குழு கூட்டம்: மேலும் அதிமுக - பாஜக கூட்டணி ஏன் உருவானது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கும் வகையில், வரும் மே 2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் கட்சி தலைமை கொண்டு வரும் தீர்மானங்களுக்கு எந்த இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அந்த விருந்தை பழனிசாமி அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. செயற்குழஉ நடைபெறும் நாளன்று, கூட்டத்தில் பங்கேற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் பழனிசாமி விருந்தளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT