Published : 18 Apr 2025 09:32 AM
Last Updated : 18 Apr 2025 09:32 AM
தேர்தல் நெருங்குவதால் திமுக-வை ரெய்டு அஸ்திரங்கள் மூலம் இறுக்கிப் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது மத்திய பாஜக அரசு. அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை நிலைகுலையச் செய்யும் வேலைகளையும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு சத்தமில்லாமல் முடுக்கி விட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இத்தனை நாட்களாய் கிணற்றில் போட்ட கல்லாய் இருந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளின் விசாரணை வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் 2017 ஏப்ரலில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. பங்களாவுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள், தடுக்க வந்த எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரையும் கொலை செய்தனர். ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் அதிமுக ஆட்சியிலேயே நடந்த இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது நடந்த சிறிது நாட்களில் வழக்கில் தொடர்புடைய, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் சிக்கி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேபோல் கோடநாடு எஸ்டேட் கம்பியூட்டர் ஆபரேட்டர் தினேஷும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இத்தனை மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கை முதலில் விசாரித்த உதகை போலீஸார், கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இருந்த போதும் வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அப்போது வலியுறுத்தின.
ஆனால், வழக்கை உதகை போலீஸாரே விசாரித்தனர். இந்த நிலையில், “திமுக ஆட்சிக்கு வந்ததும் கோடநாடு வழக்கை விரைவாக விசாரித்து முடித்து இதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்” என தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியளித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மேற்கு மண்டல ஐஜி தலைமையில் கோடநாடு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், வழக்கு கோவை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியான வழக்கு, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு ஆகிய மூன்றையும் இப்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அண்மைக்காலமாக வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், அண்மையில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் விசாரணைக்கு ஆஜரானார்.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வட்டாரத்தில் விசாரித்த போது, “ஓட்டுநர் கனகராஜூக்கு, அதிமுக ஆட்சியில் முதல்வரின் பாதுகாப்புப் பிரிவிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து குறுந்தகவல் வந்ததாக ஒரு தகவல் கிடைத்தது. ஆனால், அந்த அதிகாரியின் செல்போன் மாயமாகிவிட்டது. அதிமுக ஆட்சியில் முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு, காவல்துறை நிர்வாகப் பிரிவால் 18 செல்போன்கள் வழங்கப்பட்டன. அதில், 12 மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறுந்தகவல் பகிரப்பட்டதாக கூறப்படும் அந்த செல்போன் உட்பட 6 போன்கள் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அந்த செல்போனின் ஐஎம்இ எண்ணை வைத்து செல்போனை கண்டறிவதற்கான வேலைகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கும் பொதுவாக, செல்போன் தரவுகளை சேகரித்து வைக்கும் மையப் பகுதியாக திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளது. அங்கு 16 டேப்கள் ரீ-ரைட் எனப்படும் மறுபதிவு ஆகாமல் உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, சம்பவம் நடந்த 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, நாங்கள் சந்தேகிக்கும் 19 செல்போன் டவர்களுக்கு உட்பட்ட, 60 நபர்களின் உரையாடல்களை மேற்கண்ட டேப்பில் இருந்து மீட்க வேண்டியுள்ளது. ஆனால், அந்த டேப் உள்ள கருவி பழுதடைந்துள்ளது. அதை சரிசெய்ய ரூ.2.94 கோடி செலவாகும் என குஜராத் நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தொகையை தந்து கருவியை சரிசெய்ய அரசிடம் நிர்வாக அனுமதி கோரியுள்ளோம்.
அதிமுக ஆட்சியில் முதல்வரின் பாதுகாவலர்களாக இருந்த பெருமாள்சாமி, வீரப்பெருமாள், ராஜா, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடம் இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் அடுத்தடுத்து விசாரிக்கப்பட்டது. சசிகலாவிடமும் முன்பே விசாரிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சசிகலாவின் அண்ணி இளவரசி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
கோடநாடு வழக்கு விசாரணைகள் வேகமெடுப்பது குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரத்திடம் கேட்டதற்கு, “சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் தோல்வி, சீரான நிர்வாகத்தில் தோல்வி என அனைத்திலும் தோற்றுப்போன முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இயலாமையை மறைக்க, மக்களிடம் அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அதிருப்தியை மடைமாற்றம் செய்ய, கோடநாடு வழக்கு விசாரணையை கையில் எடுத்துள்ளது.
சட்டப் பிரச்சினையை அரசியல் ஆக்க முயற்சிக்கின்றனர். இது அருவருப்பான, அறமற்ற வேலை. அதிமுக ஆட்சிக்கு எதிரான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாத சூழலில், இதுபோன்ற செய்திகளை பரப்பி விடுவதன் மூலம் அரசியல் லாபம் பார்க்க திமுக-வினர் முயற்சிக்கின்றனர். அவர்களின் இப்படியான தேர்தல் அரசியல் நாடகங்களை மக்கள் நம்பமாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை கோடநாடு வழக்கு விசாரணையை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT