Published : 18 Apr 2025 04:33 AM
Last Updated : 18 Apr 2025 04:33 AM
மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ரூ.100 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவர் பேசியதாவது:
மாமல்லபுரம், திருச்செந்தூரில் தலா ரூ.30 கோடி, கன்னியாகுமரியில் ரூ.20 கோடி, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூரில் ரூ.20 கோடி என மொத்தம் ரூ.100 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நீலகிரி மாவட்டம் பைகாரா நீர்வீழ்ச்சி, பைகாரா படகு இல்லத்தில் மேம்படுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் ரூ.20 கோடியில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சேலம் மாவட்டம் ஏற்காடு, பூலாம்பட்டியில் (காவிரி நீர்த்தேக்க பகுதி) ரூ.20 கோடியில் வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள், உணவுக்கூடம், நடைபாதை, தகவல் மையம் ஏற்படுத்தப்படும்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைப்பகுதி ரூ.10 கோடியில் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்த பண்பாட்டு மையம், மதுரை மாவட்டத்தில் சமண பண்பாட்டு மையம் அமைக்கப்படும். சேலம் மாவட்டம் ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் ரோப் கார் அமைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதி, கோமுகி அணை, மணிமுத்தா அணை, சேலம் மாவட்டம் கருமந்துறை பழப்பண்ணை ஏரியில் ரூ.10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் ரூ.10 கோடியில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ரூ.12 கோடியிலும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி, பிச்சாவரத்தில் ரூ.10 கோடியிலும் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் ரூ.3 கோடியில் சுற்றுலா அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
சுற்றுலா துறையின் செயல்பாடுகளை முனைப்புடன் செயல்படுத்த, ‘ஒருங்கிணைந்த திட்ட மேலாண்மை அமைப்பு’ மற்றும் மருத்துவ சுற்றுலா பிரிவு ரூ.2 கோடியில் உருவாக்கப்படும்.
முக்கிய சுற்றுலா தலங்களில் ரூ.3 கோடியில் தகவல் பலகைகள், தனித்துவம் வாய்ந்த வழிகாட்டி பலகைகள் நிறுவப்படும். பொது - தனியார் பங்களிப்புடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், திருச்சி மாவட்டம் முக்கொம்பில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படும். அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளக்காடு, திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரை, ராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்கரையில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT