Published : 17 Apr 2025 05:16 PM
Last Updated : 17 Apr 2025 05:16 PM
சென்னை: திமுக அரசின் 4 ஆண்டு ஆட்சியில் சென்னை மாநகராட்சி பூங்காக்களின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.17) கேள்வி நேரத்தின்போது, தியாகராயநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசியது: “சென்னை வடபழனியில் உள்ள மாநகராட்சி பூங்காவை தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.75 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு விளையாடும் பகுதிகள், யோகா, உடற்பயிற்சி செய்வதற்கும், சிறுவர் விளையாட்டு பகுதி, பூச்செடிகள், நடைபாதைகள் மற்றும் 2 கழிவறைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் 2021-ம் ஆண்டுக்கு முன்பு 704 பூங்காக்களும், 610 விளையாட்டு அரங்குகளும் இருந்தன. கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 204 பூங்காக்கள் ரூ.81 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ரூ.24 கோடியில் 37 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் தற்போது 908 பூங்காக்களும், 724 விளையாட்டு அரங்குகளும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது ரூ.8 கோடியில், 32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 2025- 26 நிதியாண்டில் ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. 200-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் ரூ.30 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன” என்று அவர் கூறினார்.
தொல்காப்பிய பூங்கா பராமரிப்பு பணி எப்போது முடியும்? - தொடர்ந்து, மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., த.வேலு, தொல்காப்பிய பூங்கா பராமரிப்பு பணி எப்போது முடியும்? என கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதலளித்து பேசியது: “முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா உருவாக்கப்பட்டது. இடையில் 10 ஆண்டுகள் எந்த கவனிப்பும் இல்லாமல் இருந்தது. மீண்டும் நமது அரசு அமைந்த பிறகு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்போது தொல்காப்பிய பூங்கா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 1446 பள்ளிகளைச் சேர்ந்த 1.12 லட்சம் மாணவர்கள், 6 ஆயிரம் ஆசிரியர்கள், சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். பொதுமக்கள் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டள்ளனர். பூங்காவில் இதுவரை 24,500-க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ரூ.42 கோடியில் பூங்கா மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம் பார்வையாளர் மாடம், நடைபாதைகள், சிற்றுண்டியகம், திறந்தவெளி அரங்கம், இணைப்பு பாலம், கண்காணிப்பு கேமரா, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன இப்பணிகளும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவடைய உள்ளன,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT